தமிழக அரசியலையும், தலைவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் ஆறு விஐபி தொகுதிகள்..!
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், எடப்பாடி, கொளத்தூர், போடி, ஆண்டிபட்டி, வேளச்சேரி, ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகள் தான் நமது முக்கிய அரசியல் தலைவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் 2021 மிகவும் வித்தியாசமான தேர்தல் களம் ஆகும். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் நடக்கும் இத்தேர்தலில் நேரடி பிரச்சாரங்களை விட யுக்திகளை வகுத்து அதன்படி சமூக ஊடகங்கள் மற்றும் நேரடியாக பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. முன்னெப்பும் இல்லாத அளவிற்கு விளம்பர கட்டமைப்புகள் அதிக பங்கு வகிக்கின்றன.
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவும் சரி, எதிர்க்கட்சியான திமுகவும் சரி, வெற்றி பெறுவதற்காக கடுமையாக போராடி வருகின்றன. இதேபோல் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஒருபுறமும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஒருபுறமும் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். டிடிவி தினகரனும் ஒரு பக்கம் மோதி வருகிறார்.

எவை எவை
சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம், தமிழக சட்டசபை தேர்தல் 2021ல், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக நம்பப்படும் தொகுதிகளை இப்போது பார்ப்போம். எடப்பாடி, கொளத்தூர், போடி, ஆண்டிபட்டி, வேளச்சேரி, ஆயிரம் விளக்கு இந்த ஆறு தொகுதிகளுமே முக்கிய அரசியல் தலைவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க வாய்ப்பு உள்ளது. .

கொளத்தூரில் ஸ்டாலின்
இப்படி சொல்ல காரணமும் இருக்கிறது. எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், கொளத்தூர் தொகுதில் திமுக தலைவர் முக ஸ்டாலினும் போட்டியிடப்போவது உறுதி என தெரிகிறது. இதேபோல் போடியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுவார் என்று தெரிகிறது. ஆயிரம் விளக்க தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இவற்றில் மாறுதல் ஏற்பட்டாலும் ஆச்சயர்யபடுவதற்கு இல்லை

வேளச்சேரியில் கமல்?
இதுதவிர சீமான் ஏற்கனவே ஸ்டாலின் போட்டியிட உள்ள தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளதால் அவரும் கொளத்தூரில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேளச்சேரியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆண்டிபட்டியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது. அவர் ஏற்கனவே ஆர்கே நகரிலும் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.

சிறப்பு கவனிப்பு
தமிழகத்தை பொறுத்தவரை இந்த சட்டசபை தேர்தலில் கவனிப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்றாலும், மேலே சொன்ன தொகுதிகளில் கவனிப்புகளுக்கு ஸ்பெசல் கவனிப்புகள் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. தமிழக அரசியல் தலைவர்களின் எதிர்காலத்தை தீர்மனிக்கப்போகும் இந்த தொகுதி வாக்காளர்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்களோ அதுவே தமிழக அரசியலின் எதிர்காலததையும் தீர்மானிக்க போகிறது என்பதில் சந்தேகமே வேண்டாம்.