அதிமுகவின் ஆர்ப்பாட்ட கோஷம் மக்களிடம் எடுபடாது! ஆட்சியின் மீது கட்டுக்கதையை பரப்ப முயற்சி -ஸ்டாலின்
சென்னை: திமுக ஆட்சி பற்றி கட்டுக்கதையையும், அவதூறையும் பரப்ப சிலர் முயற்சிப்பதாகவும் அது மக்கள் மத்தியில் ஒரு காலமும் எடுபடாது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
சென்னை மறைமலை நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், தன்னிடம் மனு கொடுக்கும் போதே காரியம் முடிந்து விட்டது போல் உணர்ந்து மக்கள் நன்றி சொல்வதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் தொகுப்பு பின்வருமாறு;

சுற்றுப்பயணம்
நான் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறபோது, ஒரு நிகழ்ச்சியிலிருந்து இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்கிறோம் என்றால், 15 நிமிடம், 20 நிமிடத்தில் சென்றுவிட முடியும். ஆனால் ஏறக்குறை 2 மணி நேரம், 3 மணி நேரம் ஆகிறது. என்ன காரணம்? செல்லுகிற வழியெல்லாம், மக்கள் சாலையின் இருமருங்கிலும், நின்று கொண்டு இளைஞர்கள், மாணவர்கள், பெரியவர்கள், முதியவர்கள், தாய்மார்கள், மகளிர், குறிப்பாக நம்முடைய மாற்றுத் திறனாளிகள் வரவேற்கிற அந்த காட்சியை பார்க்கிறேன்.

காரியம் முடிந்துவிட்டது
சிலர் மனுக்களோடு நிற்கிறார்கள். அந்த மனுக்களை தருகிறபோது கூட என் கையில் தான் தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். என்னிடம் கையில் கொடுத்தால், நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை இன்றைக்கும் மக்களிடத்தில் வந்திருக்கிறது. காரியம் முடிந்து விட்டது போன்று நன்றி என்று உடனே சொல்கிறார்கள். காரணம், அந்த அளவுக்கு ஒரு நம்பிக்கை. எனவே, நான் உறுதியோடு சொல்கிறேன், அந்த நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது.

அதிமுகவின் ஆர்ப்பாட்டங்கள்
தங்கள் கையில் அதிகாரம் இருந்தபோது நாட்டைப் பற்றியோ, நாட்டு மக்களைப் பற்றியோ கவலைப்படாதவர்கள், சொன்னார்களே, 10 ஆண்டு காலம் எப்படி இருந்தது என்று அந்த கொடுமைகளை சுட்டிக்காட்டினார்களே! இன்றைக்கு இந்த ஆட்சியின் மீது இட்டுக் கட்டிய கதைகள் எல்லாம் அவதூறாக பரப்ப நினைக்கிறார்கள். ஆக, இப்போது போடுகிற ஆர்ப்பாட்ட கோஷங்கள், இது எல்லாம் மக்களுக்குத் தெரியாதா? மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களா?

எத்தனை முதலமைச்சர்?
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஏதோ நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் ஒரு புதிதாக ஒன்றை கண்டுபிடித்து பேசிக் கொண்டிருக்கிறார். நான்கு முதலமைச்சர்கள் அல்ல - யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குகிறார்களோ, அந்த ஆலோசனைகள் எல்லாம் செயல்வடிவம் பெறுகிறதோ, அவர்கள் அனைவரும் சேர்ந்து தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி.












Click it and Unblock the Notifications