மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடும் நடவடிக்கை.. கல்லூரி விழாவில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் மனம் விட்டு பேசுங்கள்.. மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை குருநானக் கல்லூரி பொன்விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாணவிகளுக்கு எதிரான செயல்களை அரசு வேடிக்கை பார்க்காது என்று கூறினார்.
மாணவிகள் எந்த பிரச்சினை என்றாலும் பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் மனம் விட்டு பேசுங்கள் என்று கூறிய முதல்வர், தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். எத்தகையை சோதனைகளையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியத்தை மாணவச்செல்வங்கள் பெற வேண்டும் என்றார்.

ஸ்டாலின் பேச்சு
கொரோனா தொற்றால் எனது தொண்டை பாதிக்கப்பட்டு இருந்தாலும் தொண்டு பாதிக்கப்படவில்லை எனவும் கூறினார் முதல்வர் ஸ்டாலின். எனது பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். இந்த கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொள்ள எனக்கு அனைத்து உரிமையும் உண்டு என்று தெரிவித்தார்.

பாரதியார் வரிகள்
உங்களுக்கு ஏற்படக்கூடிய தொல்லைகள்,அவமானங்களை, இடையூறுகளை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். "பாதகம் செய்வோரைக் கண்டால் பயம் கொள்ளல் ஆகாது பாப்பா..மோதி மிதித்து விடு பாப்பா.. அவர்கள் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா.." என்ற பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

கடும் நடவடிக்கை
மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவே, உடல் ரீதியாகவே தொல்லை தருபவர்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது.. அவர் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தார். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும்.

சோதனைகளை சாதனைகளாக்குங்கள்
எத்தனையோ சோதனைகளைத் தாண்டித்தான் நான் இங்க வந்திருக்கிறேன். சோதனைகளை எல்லாம் மாணவச்செல்வங்கள் சாதனைகளாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் அறிவாற்றல் மிக்கவர்களாக மட்டுமல்லாமல் உடல் உறுதியும் மன உறுதியும் கொண்டவர்களாகவும் மாற வேண்டும்.

ஆசிரியர்களின் பணி
படிப்போடு கல்வி நிறுவனங்களின் பணி முடிந்து விடுவதில்லை. கல்வி கற்பிப்பதுடன் ஆசிரியர்களின் பணி முடிந்து விடுவதில்லை என்று கூறிய முதல்வர் கல்வி நிறுவனங்களை வருமான நோக்கத்தோடு நடத்தக்கூடாது என்று தெரிவித்தார். மாணவச்செல்லவங்களுக்கு தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. ஆசிரியர்களாக இருந்தாலும் பெற்றோர்களாக இருந்தாலும் மாணவ, மாணவிகளுடம் மனது விட்டு பேச வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications