ஒழுக்கக் கேடான மாணவர்கள்.... பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு தேவை - டாக்டர் ராமதாஸ்
பள்ளிகளில் பாடங்களுக்கு இணையாக நீதி போதனைகளுக்கும், ஒழுக்க போதனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: கடவுளாக மதிக்க வேண்டிய ஆசிரியர்களையே திட்டி, தாக்க முயலும் அளவுக்கு சில மாணவர்களிடம் ஒழுக்கக்கேடு ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர் அந்த பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் பணியாற்றி வரும் சஞ்சய் என்ற ஆசிரியரை திட்டித் தாக்க முயன்றார். அந்த வீடிய காட்சிகள் ஊடகங்களில் வெளியானது.
ஆசிரியர் சஞ்சய் வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம் ரெக்கார்ட் நோட்டை சமர்ப்பிக்கும் படி கேட்டுள்ளார்.இதனை சில மாணவர்கள் பொருட்படுத்தாமல் நோட்டையும் சமர்ப்பிக்காமல் இருந்தனர். இந்நிலையில் நேற்று வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர் சஞ்சய் ரெக்கார்டு நோட்டு சமர்ப்பிக்காத மாணவர்களை சமர்பிக்குமாறு கூறினார். ஒரு மாணவன் வகுப்பறையில் சட்டையை கழற்றி விட்டு பாய் போட்டு படுத்துக்கொண்டிருந்தான். அந்த மாணவனை எழுப்பி ரொக்கார்ட் நோட்டை சமர்பிக்குமாறு கூறினார்.

அப்போது அந்த மாணவன் ஆசிரியரை ஆபாசமாக பேசினான். தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டே ஆசிரியரின் அருகில் சென்றார். ஓங்கி குத்த முயன்றார். சில மாணவர்கள் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆசிரியரை திட்டிய மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.மாணவர்களின் செயல் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ரெக்கார்ட் நோட் எழுதாததற்காக கண்டித்த ஆசிரியரை மாணவர் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயலும் காணொலி வேகமாக பரவி வருகிறது. இந்த நிகழ்வு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்!

தாய், தந்தையருக்குப் பிறகு மாணவர்கள் வாழ்வில் ஆசிரியர்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் தான் மாணவர்களை கரை சேர்க்கும் ஓடங்கள். கடவுளாக மதிக்க வேண்டியவர்களையே திட்டி, தாக்க முயலும் அளவுக்கு சில மாணவர்களிடம் ஒழுக்கக்கேடு ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது!

திரைப்படங்களில் ஆசிரியர்கள் தவறாக சித்தரிக்கப்படுவதும், சமூகச் சூழலும் தான் இதற்கு காரணம் ஆகும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பள்ளிகளில் பாடங்களுக்கு இணையாக நீதி போதனைகளுக்கும், ஒழுக்க போதனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
தேவநாதன் அறிக்கை
இதனிடையே டாக்டர் தேவநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையிர் சீரழியும் மாணவ சமுதாயத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவ மாணவிகள் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. போதை பொருட்களால் ஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் சீரழிந்து வருகிறது. மாணவர்கள் மட்டுமல்லாது மாணவிகளும் மது அருந்துவது போன்ற செயல்கள் வேதனையளிக்கிறது. இவர்கள் தான் நாளைய இந்தியாவை கட்டமைக்க போகும் இளைஞர்களா?
கல்வி நிலையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் போதை பொருள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. பண போதையால் கண்மூடி தூங்கிவிட்டதா தமிழக அரசு? ஆபரேசன் கஞ்சா திட்டத்தின் மூலம் நாள்தோறும் கிலோ கனக்கில் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கூறும் காவல்துறை அதற்கு அடிமையான மாணவர்கள், இளைஞர்கள் அதிலிருந்து மீட்க எடுத்த நடவடிக்கை என்ன ? கஞ்சாவை போல் மாணவர்களை ஆட்கொண்டிருக்கும் பல போதை பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் ? பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் செயல்படும் கடைகளில் அதிரடி சோதனைகள் நடத்தாதது ஏன் ? இது போன்ற பல கேள்விகள் மனதில் எழுகின்றன.
மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பதற்கு என்று தடை விதிக்கப்பட்டதோ அன்றே மாணவ சமுதாயம் சீரழிய தொடங்கிவிட்டது. ஆன்லைன் கல்வி என்ற பெயரில் கைப்பேசியில் மூழ்கியிருக்கும் மாணவர்கள் சில திரைப்படங்களை பார்த்து தீய வழிக்கு செல்கின்றனர். சீரழிவு பாதையில் சிக்கிக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும்.
போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீட்டெடுக்க மன நல ஆலோசனை வழங்க வேண்டும். கல்வி நிலையங்களுக்கு அருகில் போதை பொருள் விற்கப்படாததை உறுதி செய்ய வேண்டும். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை அளவுடன் கண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே மாணவ சமுதாயத்தை காக்க முடியும்'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications