ஆளுநருக்கு வருஷத்துக்கு 6.5 கோடி செலவா? சுப.வீரபாண்டியனுக்கு வந்த கோபம்! முதல்வருக்கு பறந்த கோரிக்கை
சென்னை : தமிழ்நாடு முதல்வரும், தமிழக அரசும், ஆளுநருக்கான செலவை உடனே குறைக்க வேண்டும் என்றும், ஆளுநர் மாளிகையின் பரப்பளவைக் குறைக்க வேண்டும் என்றும், முதலமைச்சருக்கு அவசர வேண்டுகோள் விடுப்பதாக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் ஆரம்பத்தில் இருந்தே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை ஆளுநர் தற்போது வரை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால் பல சிக்கல்கள் எழுந்திருக்கிறது.
மேலும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பேசும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம், பாரதம், இந்து மதம் குறித்து பேசி வருகிறார். இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆளுநர் ஆர்.என்.ரவி
தொடர்ந்து ஆளுநரின் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அவரை திரும்ப பெற வேண்டும் என கடுமையாக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். மேலும் ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பல தொடர்ந்து ஆளுநரை விமர்சித்து வருகின்றனர்.

ஆளுநர் மாளிகை
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வரும், தமிழக அரசும், ஆளுநருக்கான செலவை உடனே குறைக்க வேண்டும் என்றும், ஆளுநர் மாளிகையின் பரப்பளவைக் குறைக்க வேண்டும் என்றும், முதலமைச்சருக்கு அவசர வேண்டுகோள் விடுப்பதாக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இன்றைய நாளேடுகளில், தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான, அதிர்ச்சியூட்டக்கூடிய இரண்டு செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தியாவிலேயே ஆளுநருக்காக மிகுதியாகச் செலவு செய்யும் மாநிலம் தமிழ்நாடுதான் என்பது முதல் செய்தி!

சுப.வீரபாண்டியன்
குடியரசுத் தலைவர், ஆளுநர் ஒப்புதலுக்காக, ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடக்கும், தமிழ்நாடு நிறைவேற்றிய சட்ட முன்வடிவுகள் 66 என்பது இரண்டாவது செய்தி! ஆண்டு ஒன்றுக்கு ஆளுநருக்காக 6.5 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என்று கூறும் அந்தச் செய்தி, உ.பி. போன்ற மாநிலங்களை விடவும் இது மிகக் கூடுதல் என்று சொல்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் கூட, 3.5 கோடிதான் செலவிடப்படுகிறதாம்! மற்ற மாநிலங்களை விடக் கூடுதலாக, மக்களின் வரிப்பணத்தை ஏன் இப்படி நாம் செலவழிக்க வேண்டும்?

ஆன்லைன் ரம்மி
ஒருவேளை, நம் ஆளுநர் மிக விரைந்து செயல்படுகிறார் என்றால் கூட, கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். ஆனால் நிலைமை முற்றிலும் எதிர்மாறாக இருக்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் காத்துக்கிடக்கும் கோப்புகளைக் கழித்துவிட்டால் கூட, 20க்கும் மேற்பட்ட கோப்புகள் இங்கே ஆளுநர் மாளிகையிலேயே தேங்கிக் கிடக்கின்றன. சென்ற ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் உள்பட, இப்போது அனுப்பிவைக்கப்பட்டுக் காலாவதியாகி விட்ட ஆன்லைன் ரம்மி தடுப்புச் சட்ட முன்வடிவு வரையில் இதில் அடக்கம்!

156.14 ஏக்கர்
செலவு ஒருபுறமிருக்க, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை 156.14 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அம்மாளிகையில் நூற்றுக்கணக்கான அறைகள் உள்ளன என்று கூறுகின்றனர். தன் பணியைக் கூடச் செய்யாத ஓர் ஆளுநருக்கு இத்தனை செலவும், இத்தனை ஆடம்பரமான மாளிகையும் ஏன் என்று கேள்வி கேட்க, இந்நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு.

செலவை குறைக்க வேண்டும்
எனவே தமிழ்நாடு முதல்வரும், தமிழக அரசும், ஆளுநருக்கான செலவை உடனே குறைக்க வேண்டும் என்றும், ஆளுநர் மாளிகையின் பரப்பளவைக் குறைக்க வேண்டும் என்றும், முதலமைச்சருக்கு அவசர வேண்டுகோள் விடுக்கப்படுகிறது! இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி, நாடு முழுவதும் அறவழிப் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications