முதல்வராக முதல் பிறந்தநாள்... 2 ஆண்டுகளுக்குப் பிறகு தொண்டர்களிடம் வாழ்த்து பெறும் மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின் முதல்வரான பின்னர் தனது முதல் பிறந்தநாளை நாளை சிறப்பாக கொண்டாடப்போகிறார். அதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை: தொடர் வெற்றிகளுக்குப் பின்னர் முதல்வர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுவதை தவிர்த்து வந்த ஸ்டாலின் நாளைய தினம் காலையில் தொண்டர்களிடம் வாழ்த்து பெற உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளன்று காலை 7 மணிக்கு பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். காலை 07.15 மணிக்கு தந்தை பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்து கலைஞர் அரங்கத்தில் தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார். இதற்கான அறிவிப்பை திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தொண்டர்களுக்குக் கடிதம்
தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்,
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் இமாலய வெற்றியை அளித்து நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர். வெற்றி பெற்றவர்களை நேரில்சந்திக்க வேண்டும் என்ற எண்ணமும் விருப்பமும் எனக்கு அதிகமாக இருந்தது. அறிவாலயத்தில் அவர்களின் ஆர்வம் கண்டு மகிழ்ந்தேன்.

தொடர் வெற்றிகள்
இந்த வெற்றி, மாபெரும் வெற்றி. தொடர்ந்து 6 தேர்தல் களங்களில் அடுத்தடுத்து வெற்றியை பெற்றுள்ளது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி. இந்த வெற்றியின் அருமை பெருமை முழுவதும் மக்களையே சேரும். இதற்காக அல்லும் பகலும் உழைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

ஆடம்பரம் வேண்டாம்
மார்ச் 1ல் என்னுடைய பிறந்தநாள். என் பிறந்தநாளையொட்டி, நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது. மக்களுக்கு பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். அறிவுப் புரட்சிக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள். வருங்கால தலைமுறைக்கு நம் லட்சியங்களை எடுத்துரைக்கும் வகையில் புதிய உறுப்பினர்களைச் சேருங்கள். திராவிட மாடல் அரசின் 9 மாதகால சாதனைகளை விரிவாக எடுத்துரையுங்கள் என்று கூறியுள்ளார்.

முதல்வராக முதல் பிறந்தநாள்
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டு காலமாக தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடுவதைத் தவிர்த்து வந்தார் ஸ்டாலின். இந்த ஆண்டு ஆளுங்கட்சியாக அரியணையில் அமர்ந்துள்ளது. 69வது பிறந்தநாளை கொண்டாடப்போகிறார் முதல்வர் ஸ்டாலின். அவர் முதல்வரான பின்னர் வரும் முதல் பிறந்தநாள் என்பதால் அதை சிறப்பாக கொண்டாட பல நாளிதழ்கள், வார இதழ்களில் விளம்பர வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தொண்டர்களிடம் வாழ்த்து
தொண்டர்களை நாளை காலை சந்தித்து வாழ்த்து பெறுகிறார் மு.க ஸ்டாலின் இதற்காக அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூங்கொத்துக்கள், புத்தகங்கள், பண மாலைகளால் தொண்டர்கள் தங்களின் தலைவரை வாழ்த்து மழையில் நனைய வைக்கப்போகின்றனர்.












Click it and Unblock the Notifications