எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டம்..தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்
அரசுப் பள்ளிகளில் 1-3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை: அரசுப் பள்ளிகளில் 1-3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிற் நடுநிலைப் பள்ளியில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கொரோனா பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள்தான். இரண்டு ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டதால் பல மாணவர்களுக்கு எழுத்துக்கள் மறந்து விட்டன. கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
1,2ஆம் வகுப்புகள் படிக்காமலேயே ஆல்பாஸ் மூலம் 3ஆம் வகுப்புக்கு சென்ற மாணவர்கள் இருக்கின்றனர். எனவே
8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுத, படிப்பதை உறுதிசெய்யும் விதமாக 'எண்ணும், எழுத்தும்' திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாகும்.

மாணவர்களின் கற்றல் ஆற்றல்
கல்வியில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் இணைந்த மொழிக் கற்பித்தலில் மாணவர்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு (level based) ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும் என்பதையே எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

ஆங்கில அறிவு
இதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஒன்று முதல் மூன்று வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்கள் சூழ்நிலையியல் பாடக்கருத்துக்களுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் 8 வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.

எண்ணும் எழுத்தும் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3ஆம் வகுப்புகளுக்கு 2022-23 ஆம் ஆண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்றது. இதற்காக அரசுமற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரைபாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கு பயிற்சி
இதைத் தொடர்ந்து மாவட்ட மற்றும் வட்ட அளவிலான பயிற்சிகள் நடைபெற்றன. இதற்காக 1, 2, 3 வகுப்புகளுக்குக் கற்பிக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகம் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டது.

பள்ளிகள் இன்று திறப்பு
இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10ஆம்வகுப்பு வரையான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே எண்ணும், எழுத்தும் திட்டத்தையும் அமல்படுத்த முடிவாகியுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.

முதல்வர் வரவேற்பு
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதுதவிர கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை முதல்வர் ஸ்டாலின் வரவேற்கும் நிகழ்வும் நடைபெற்றது












Click it and Unblock the Notifications