யார் கண் பட்டுச்சோ? காங்கிரஸில் களைகட்டிய கோஷ்டி மோதல்! டெல்லிக்கு பறந்த தலைகள்! அழகிரிக்கு சிக்கல்!
சென்னை : தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கேஎஸ் அழகிரி பொறுப்பேற்ற பின்னர் தமிழக காங்கிரஸில் கோஷ்டி பூசல் இல்லாமல் அமைதியாக இருந்த எரிமலை போல் இருந்த நிலையில், சத்திய மூர்த்தி பவனில் மோதலுக்கு பிறகு அது வலுத்துள்ளது. இந்நிலையில் கேஎஸ் அழகிரிக்கு எதிராக முக்கிய தலைவர்கள் டெல்லிக்குப் பறந்துள்ளனர்.
'சேர்ந்தே இருப்பது காங்கிரஸும் கோஷ்டி மோதலும்' என சிலர் கிண்டல் அடிப்பார்கள். அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி மோதலுக்கு பஞ்சம் இருக்காது. மேல்மட்ட தலைவர்கள் தொடங்கி கீழ்மட்ட தலைவர்கள் வரை உள்ளூர் பிரமுகர்கள் கோஷ்டிகளாகவே செயல்பட்டு வருவார்கள்.
பா,சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட பல தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனித்தனி அணிகளாகவே செயல்பட்டு வந்தார்கள். இதனால் தமிழக காங்கிரஸ் அதல பாதாளத்திற்கு சென்றது.

கோஷ்டி மோதல்
இந்த நிலையில் கோஷ்டி மோதல்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே எஸ் அழகிரி நியமிக்கப்பட்டார். அதற்கு பலனும் கிடைத்தது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கோஷ்டி மோதல் இல்லாமல் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்தது. அந்த அளவுக்கு அனைவரையும் அரவணைத்து மிகவும் தெளிவாக கட்சியை நடத்தி வந்தார் அழகிரி யார் கண் பட்டதோ தெரியவில்லை கடந்த 15ஆம் தேதி அதற்கு முடிவு கட்டப்பட்டது. நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அக்கட்சி தலைமை அலுவகமான சத்தியமூர்த்தி பவனில் மோதல் கலவரமாகவே மாறியது.

அலுவலகத்தில் அடிதடி
கடந்த 15ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பாடு குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

தொண்டர்களுக்கு பளார்
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்தில், திடீரென கைகலப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளுவாகி அடிதடியாக மாறியது. அப்போது கட்டையால் தாக்கி கொண்டதால் களக்காடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஸ்வா, நெல்லை மாவட்ட நிர்வாகிகள் டேனியல், ராபர்ட் ஆகிய மூன்று பேரும் ரத்தம் சொட்ட சொட்ட அழைத்து செல்லப்பட்டனர். மேலும் தன்னிடம் பேச வந்த நிர்வாகிகள் அழகிரி பளார் என அறைந்தார். இந்த காட்சிகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கட்சியில் பரபரப்பு
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரனே காரணம். அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அவர் கட்சியில் இருந்தும் முழுமையாக நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. இதனால் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.

முன்னாள் தலைவர்கள்
இதனிடையே தலைவரே ரவுடிகளை ஏவி கட்சியினரை தாக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று நடைபெற்ற இந்திரா காந்தியின் 105 பிறந்த நாளில், அவரது சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் அவரது தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கை புறக்கணித்தனர். இந்தச் சம்பவம் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோஷ்டி மோதல் வலுப்பெற்றுள்ளது. கேஎஸ் அழகிரிக்கு எதிராக முன்னாள் தலைவர்கள் டெல்லி மேலிடத்துக்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேஎஸ் அழகிரிக்கு எதிராக புகார்
தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள கேஎஸ் அழகிரிக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் இ வி கே எஸ் இளங்கோவன் கே வி தங்கபாலு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர் நேற்று மாலை மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசி அவர்கள் தமிழக காங்கிரஸில் நிலவும் கோஷ்டி மோதல் உள்ளிட்டவை குறித்தும் பேசியிருக்கின்றனர்.

விரைவில் மாற்றம்
கட்சி அலுவலகத்தில் தாக்குதல், அதன் பின்னணி, தொண்டர்களை கன்னத்தில் அறைந்தது, கேஎஸ் அழகிரியின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் குறித்து புகார் அளித்ததாகவும் அவரை மாற்ற வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது. அமைதியாக இருந்த காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி மோதல் தலை தூக்கி அவருக்கு எதிராக தலைவர்கள் புகார் அளித்திருப்பது பரபரப்பை கூட்டி இருக்கிறது. இன்னும் சில நாட்களில் மோதல் மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications