கண்ணா 3 லட்டு திண்ண ஆசையா! பொங்கல் பரிசு + ரூ.3000 + வேட்டி சேலை! இன்று வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்!
சென்னை: தமிழகத்தில் பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட மாநில அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கப் பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி சேலையும் ரேசன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கனை நியாய விலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று வழங்க உள்ளனர். வரும் 8ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.

கடந்த சில வாரங்களாகவே, இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படுமா? இல்லையா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்து வந்தது. காரணம், கடந்த ஆண்டு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பை மட்டும் வழங்கிய நிலையில், ரொக்கப் பணம் வழங்கவில்லை.
பொங்கல் பரிசு தொகுப்பு
அதற்கு முன்பு 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் திமுக அரசு ரூ.1,000 ரொக்கப் பணத்தையும் இணைத்து வழங்கி வந்தது. அதேபோல், 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.2,500 வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் மீண்டும் ரொக்கப் பணம் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்தது.
மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் சமீபத்தில் வெளியான அரசாணையில், 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ரொக்கப் பணம் வழங்கப்படுமா? இல்லையா? என்ற விவாதம் மீண்டும் கிளம்பியது. இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ரூ.3000 ரூபாய் ரொக்கப் பரிசு
அந்த ஆலோசனையின் முடிவில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்க அரசு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் பயன்பெற உள்ளனர்.
வேட்டி மற்றும் சேலை
பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழக்கம்போல ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பும் வழங்கப்படும். இதனுடன் வேட்டி மற்றும் சேலைகளும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பரிசுகளுக்கும் கூடுதலாக ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்பட இருப்பதால், இந்த ஆண்டு பொங்கல் பரிசு திட்டம் பொதுமக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இன்று டோக்கன் விநியோகம்
இந்நிலையில், பொங்கல் பரிசை பெற ரேஷன் கடைகளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, நியாய விலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்க உள்ளனர். இந்த டோக்கன் அடிப்படையில் மக்கள் தங்களுக்கான பரிசுப் பொருள்களையும், ரொக்கப் பணத்தையும் பெறலாம். இதன் மூலம் பொங்கல் திருநாளை மக்கள் சிரமமின்றி கொண்டாட அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
