ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.. மகளிருக்கான ரூ1,000 அறிவிப்பு வெளியாகும்?
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டசபை இன்று கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் மகளிருக்கு ரூ1,000 உதவித் தொகை வழங்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வழக்கம் போல தலைமை செயலகத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் சென்னை கலைவாணர் அரங்கத்திலேயே சட்டசபை கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2022-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று உரையாற்ற உள்ளார். இன்று காலை 9.55 மணிக்கு கலைவாணர் அரங்கத்துக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் வரவேற்று அரங்கத்துக்குள் அழைத்து செல்வர். பின்னர், சபாநாயகர் இருக்கையில் ஆளுநர் அமருவார். அவருக்கு வலதுபுறம் உள்ள இருக்கையில் சபாநாயகர் அப்பாவு, இடதுபுறம் உள்ள இருக்கையில் ஆளுநரின் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டிலும் அமருவர்.
பின்னர் காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கும். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவடையும்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது. நடப்பாண்டின் இந்த முதல் கூட்டத் தொடரில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications