கட்டுக்கடங்காத கொரோனா... 20,000ஐ கடந்த ஆக்டிவ் கேஸ்கள்... உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,446 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 20,204ஆக உயர்ந்துள்ளது.
உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
அதேபோல இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,446 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 82,078 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய 17 பேர் உட்பட 3,446 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு 8,96,226ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா உயிரிழப்பு
ஒரே நாளில் சிகிச்சை பலனிற்றி 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு 12,764ஆக அதிகரித்துள்ளது. கடந்த 14 மணி நேரத்தில் 1,834 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,63,258ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ் & சிகிச்சை
மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 20,204 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் மாநிலத்தில் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது,

சென்னையில் அதிகம்
சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 1290ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் 730 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோல 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்து கோவையில் அதிகபட்சமாக 292 பேருக்கும் செங்கல்பட்டில் 285 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 201 பேருக்கும் திருச்சியில் 142 பேருக்கும் தஞ்சையில் 138 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.