சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போலீஸ் தாக்கியதில் அரியலூர் விவசாயி மரணம்? வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!

Google Oneindia Tamil News

சென்னை: அரியலூரைச் சேர்ந்த விவசாயி போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆங்காங்கே போலீசார் தங்கள் அதிகாரத்தை மீறு அப்பாவி பொதுமக்களைத் தாக்குவதாகப் புகார்கள் இருந்து வருகிறது. சாத்தான்குளம் சம்பவத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.

Tamilnadu govt says Ariyalur farmer death has been transferred to CBCID

இருப்பினும், இதேபோன்ற சம்பவங்கள் மாநிலத்தில் சில இடங்களில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி அரியலூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் அருண்குமார் என்பவரைத் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.

அருண்குமாரை தேடி காசங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது மட்டுமில்லாமல், அவரை போலீசார் சரமாரியாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அவரது உறவினர் கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம், மருத்துவர் குழுவை அமைத்து பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

இதனிடையே இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செம்புலிங்கத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

மேலும், இந்த உத்தரவுக்கான நகலையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணையில் டிஎஸ்பி தலைமையில் விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சந்திரசேகரன், சிபிசிஐடி டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், அடுத்த மூன்று மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

English summary
Ariyalur farmer beaten to death by police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X