சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருணாநிதி பேனா சின்னம்: சுனாமி, நிலநடுக்கம் ஒன்னும் செய்யவே முடியாதாம்.. அவ்ளோ பக்கா ப்ளானாம்!

கருணாநிதி பேனா நினைவு சின்னம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பொதுப்பணி துறை தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மும்பை சத்ரபதி சிவாஜி சிலை கட்டமைப்பை வைத்து கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளதாவது: இந்த நினைவு சின்னமானது மூன்று பணித்தளங்களாக பரிசீலிக்கப்பட்டு, அவை கடல்சார் சூழயியல், சமூக பொருளாதார மற்றும் வாழ்வியல் காரணிகளால் ஒப்பீடு செய்யப்பட்டு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிட வளாகத்தின் அருகில் கடற்பரப்பினுள் சுமார் 360 மீட்டர் தொலைவில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிடத்திலிருந்து சுமார் 650 மீட்டர் நீளமும், 9 மீட்டர் அகலமும் கொண்ட அணுகு பாலத்துடனும், கடற்கரை தரைமட்டம் மற்றும் கடற்பரப்பின் உயர்நீர்மட்டம் (HTL) ஆகியவற்றிலிருந்து சுமார் 6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படவுள்ளது.இத்திட்டமானது கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்குஉட்பட்டு மூன்று பிரத்தியேக பகுதிகளாக வடிவமைக்கப்படவுள்ளது.

Tamilnadu Public Works Department explains on Karunanidhi Pen Memorial

முதல் பகுதி: முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிட வளாகம் முதல் கடற்கரையின் உயர்நீர் மட்ட நிலை (HTL) வரையிலான, கடலோர ஒழுங்கு முறை மண்டலம் CRZ-II-விற்கு உட்பட்ட சுமார் 220 மீட்டர் நீளத்திற்கு கான்கீரிட் பாலமாக, 15 மீட்டர் இடைவெளியில் தூண் அமைப்புகளுடன் கூடிய பாலமாக, கடற்கரை பரப்பின் மேல் 6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படவுள்ளது.இத்தூண்களின் இடைவெளி விசாலமாக இருப்பதால், பாலத்திற்கு கீழே கடற்கரை மணற்பரப்பின் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் நேராதவாறு அமைக்கப்பட உள்ளது.

இரண்டாம் பகுதி: கடற்கரை பரப்பில் உயர்கடல் மட்ட நிலை (HTL) மற்றும் தாழ்கடல் மட்ட நிலை (LTL) ஆகியனவற்றிற்கு இடைப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டலம் CRZ-IA -க்கு உட்பட்ட சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு Lattice Girder அமைப்புடன் கூடிய இரும்பு பாலமாக அமைக்கப்படவுள்ளது. இப்பாலத்திற்கான தாங்குதூண்கள் எவையும் CRZ-IA பகுதியில் அமையா வண்ணம் அமைக்கப்படவுள்ளது. எனவே, பாலத்தின் கீழ் போக்குவரத்து பாதிக்கப்படாமலும் அமையவுள்ளது.

மூன்றாம் பகுதி: தாழ்ந்த கடல்மட்ட நிலை (LTL) முதல் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ள கடற்பரப்பினுள் சுமார் 360 மீட்டர் பகுதியானது கடலோர ஒழுங்குமுறை மண்டலம் CRZ-IVA-விற்கு உட்பட்டது. இப்பகுதியில் 15 மீட்டர் இடைவெளியில் கான்கீரிட் தூண்கள் அமைக்கப்படவுள்ளது. இத்தூண்கள் தேவையான இடைவெளியுடன் அமைக்கப்பட இருப்பதால், மீன்பிடி படகுகளின் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் அதற்கான போக்குவரத்து அனுமதியும் வழங்க உத்தேசிக்கப்படுள்ளது. இந்நினைவுச் சின்னத்தை காண வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவுள்ளன. ஆபத்து கால மீட்பு நடவடிக்கைகள் திட்ட தளத்தின் உட்புறமும் செயல்படுத்தப்படவுள்ளது.

மக்கள் பெருமளவில் கூடுவதால் ஏற்படும் ஆபத்துக்களையும் கருத்தில் கொண்டு ஆபத்துக் காலங்களில் உரிய முறையில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. குறிப்பாக இவ்வளாகத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. ஆழிப்பேரலை, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்னறிவதற்கான உரிய கருவிகள் பொருத்தப்பட்டு அபாய காலங்களில் வளாகத்தினுள் பொது மக்களின் அனுமதி முற்றிலுமாக தடை செய்யப்படும். மேலும், அத்தகைய காலங்களில் வளாகத்தினுள் இருக்கும் மக்களை ஆபத்திலிருந்து மீட்க தேவைப்படும் உபகரணங்களோடு உரிய பயிற்சி பெற்ற மீட்புபடையினர் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வளாகத்தில் பொதுமக்களின் எண்ணிக்கை ஒரு நேரத்தில் 300 நபர்களுக்கு மேற்படாதவாறு கண்காணிக்கப்பட்டு, மின்சக்தியால் இயங்கும் வாகனங்கள் மற்றும் மீட்புப் படகுகள் உதவியுடனும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். நினைவுச் சின்னத்தின் வடிவமைப்பானது ஆழிப்பேரலை, புயல், வெள்ளம், பெருங்காற்று. நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளை கருத்தில் கொண்டு அவற்றை தாங்கும் வண்ணம் உரிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் சென்னை - இந்திய தொழில்நுட்ப கழக வல்லுனர்களின் அறிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tamilnadu Public Works Department explains on Karunanidhi Pen Memorial

இவ்வளாகத்தின் ஆழ்துளையிடும் கட்டுமானப் பணிகளில் ஏற்படும் கழிவுகள் உரிய இயந்திரங்களால் உறிஞ்சப்பட்டு, கடற்பரப்பிற்கு வெளியே உரிய முறையில் சூழலியல் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் அகற்றப்படும். மேலும், கட்டுமான பணிகளின் போது ஏற்படும் கழிவு பொருட்களும் அவ்வாறே உரிய முறையில் அகற்றப்படும். இவ்வளாகம் கட்டப்படுவதால் ஏற்படும் கடல் மண்ணரிப்பு மற்றும் மண் சேமிப்பு குறித்த ஆய்வினை தேசிய கடல்சார் ஆய்வு மையத்தின் (NCCR) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வண்ணம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தினால் ஏற்படக்கூடிய கூடுதல் போக்குவரத்து மற்றும் மக்கள் கூடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தேவையான சாலை இணைப்புகள் குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளவும், விரிவான போக்குவரத்து மேலாண்மை ஆய்வு மேற்கொள்ளவும் சென்னை இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டு நிறுவனமான நகரமயமாக்கல், கட்டடம், சுற்றுச்சூழல் மையம் மூலமாக உரிய நிபுணர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டமானது மகாராஷ்டிரா அரசால், மும்பையில் அமைக்கப்பட்டு வரும் சத்ரபதி சிவாஜி திருவுருவச்சிலை கட்டமைப்பை முன்னுதாரணமாக வைத்து அமைக்கப்படவுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு தேவையான கடல்சார் மேலாண்மை குழும அனுமதி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றின் அனுமதியும் பெற உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தற்கு தேவையான சென்னை துறைமுகம், தேசிய கடலோர பாதுகாப்புப் படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றின் தடையில்லா சான்றிதழ் பெற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

English summary
Tamilnadu Public Works Department has explained on Karunanidhi Pen Memorial in Sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X