பேராசிரியர் அன்பழகனுக்கு பெருமை சேர்த்த ஸ்டாலின்! பள்ளிக்கல்வித் துறை வளாகத்துக்கு புதிய பெயர்!
சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயல்படும் DPI வளாகமானது இனி 'பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்' என அழைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதேபோல் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் விவரம் வருமாறு;

பேராசிரியர் அன்பழகன்
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டிற்கு சுமார் ரூபாய் 1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஆசிரியர் மாணவர் நலன்
அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து முதலமைச்சர் அவர்கள் நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும் மராமத்துப் பணிகளுக்கும் கூடுதலாக சுமார் 1400 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.

பேராசிரியர் பெயரில் விருது
இத்துடன், பேராசிரியர் அன்பழகன் அவர்களது நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் "பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்'' என்றும் அழைக்கப்படும். மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நூற்றாண்டு விழா
இதனிடையே பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ள திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், நாளை இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications