பரபரப்பான சூழலில் நாளை தமிழக சட்டசபை கூடுகிறது... கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடுகள் தயார்..!
சென்னை: கொரோனா பரபரப்புக்கு மத்தியில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
நாளை தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் வரும் புதன்கிழமை 16-ம் தேதியுடன் நிறைவடைகிறது. வழக்கமாக இரண்டு வாரங்களுக்கு குறையாமல் நடைபெறும் சட்டசபை கூட்டம் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக மூன்று நாட்களுக்கு சுருக்கப்பட்டுள்ளது. கோட்டையில் போதிய இட வசதி இல்லாத காரணத்தால் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடத்தப்படுகிறது.

கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளம் விசாலமாக இருப்பதால் எம்.எல்.ஏ.க்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர்வதற்கு ஏதுவாக இருக்கும். ஏ.சி. இல்லாமல் ஃபேன்கள் மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிகிறது. ஆயிரம் பேருக்கு மேல் அமரக்கூடிய இடவசதி இருப்பினும் 400 பேருக்கு மேல் கலைவாணர் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உட்பட 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் அவைக்கு வரமாட்டார்கள். 200 முதல் 210 எம்.எல்.ஏ.க்கள், 50 பத்திரிகையாளர்கள், 25 சட்டசபை காவலர்கள், 25 சட்டமன்ற ஊழியர்கள் என மொத்தம் 400 பேர் வரை கலைவாணர் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட உள்ளார்கள்.

நாளை தொடங்கும் சட்டசபைக் கூட்டம் மறைந்த இந்நாள் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்படும். மொத்தமாக நாளை 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை மட்டுமே சட்டசபை கூட்டம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.