சேலம் ஆவின் பால் பண்ணையில் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிப்பு.. சட்டசபையில் அமைச்சர் நாசர் தகவல்!
சென்னை: சேலம் ஆவின் பால் பண்ணையில் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கப்படும் என்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். அம்பத்தூர் பால் பண்ணையில் பால் பொருட்கள், மூலப் பொருட்களுக்கான ஆய்வுக்கூடம் ஆகியவை ரூ.10 கோடி மதிப்பில் நிறுவப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு துறைகளில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியவுடன், அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர், பால்வளத்துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை இன்று சட்டசபையில் வெளியிட்டார். அதன் விவரம் பின்வருமாறு:-

சீர்திருத்தம் வரும்
ஆவின் பால், பால் பொருட்களின் விற்பனை முறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும். பால், பால் பொருட்களின் விற்பனை விரிவாக்கம் செய்து அதிக லாபத்தை ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதர நிறுவனங்களின் விலையுடன் ஒப்பிட்டு ஆவின் பால் பொருட்களின் விலை மாற்றப்படும். ஆவின் பாலகங்களில் விற்கும் பால் பொருட்களுக்கு ரசீது வழங்கப்படும்.

இனிப்பு இல்லாத பால்கோவா
பால் பவுடர், வெண்ணெய் மொத்த விற்பனை முறையில் சீர்திருத்தம் செய்யப்படும். ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வரையிலான பதவியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சேலத்தில் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கப்படும். அதாவது சேலம் பால் பண்ணையில் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும். இங்கு தினமும் 2 மெட்ரிக் டன் அளவில் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்க ஏற்பாடு செய்யப்படும்.

அம்பத்தூர் பால் பண்ணை
அம்பத்தூர் பால் பண்ணையில் பால் பொருட்கள், மூலப் பொருட்களுக்கான ஆய்வுக்கூடம் ஆகியவை ரூ.10 கோடி மதிப்பில் நிறுவப்படும். தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடியில் நாள் ஒன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும். ரூ. 25 கோடி செலவில் இந்த கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும் என்று அமைச்சர் நாசர் கூறினார். இது தவிர ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 செம்மறி ஆடுகள் வழங்கப்படும். மொத்தம் 38,000 பெண்களுக்கு ரூ.75.63 கோடியில் செம்மறி/வெள்ளாடுகள் 100% மானியத்தில் தரப்படும் என்று சட்டசபையில் இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வண்ணமீன் வர்த்தக மையம்
மேலும், சென்னை கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ணமீன் வர்த்தக மையம் ரூ.50 கோடியில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும். வண்ண மீன்களை எளிதாக சந்தைப்படுத்த ஏற்றுமதி மூலம் வண்ணமீன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்த மையம் உதவும் நாட்டுக்கோழி உற்பத்தியை அதிகரிக்க நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை நெல்லையில் நிறுவப்படும். தருமபுரி திருச்சிகருப்பு செம்மறி ஆட்டின ஆராய்ச்சி நிலையம் ரூ.1.80 கோடியில் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம்
இது தவிர தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ரூ.5 கோடியில் தூர்வாரி ஆழப்படுத்தி சீரமைக்கப்படும் என்று மீன்வளத்துறை சார்பில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணி ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications