டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: என்னென்ன பதவிகள்... எத்தனை மதிப்பெண் - முழு விபரம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி மற்றும் காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உள்ளிட்ட அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் வெளியிட்டார். கிராம நிர்வாக அலுவலர் , டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அரசு வேலையில் சேர வேண்டும் என்பது பலரது கனவு. தமிழகத்தில் குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக படித்து வருகின்றனர். குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.
கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. குரூப் 4 தேர்வுக்கு கல்வி தகுதி 10ஆம் வகுப்பு, ஆகவே பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு என எது முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 7,382 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பாழடைந்த வீட்டில் “பேசி கொண்டிருந்த”பெண்.. அடுத்தடுத்து வந்த 3 பேர்.. காதலன் கண்முன்னே நடந்த கொடூரம்
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நாளை முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடைபெறும்.அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.
மொத்தம் 7,382 காலி பணியிடங்கள் ஆகும். இதில் 81 பணியிடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படவுள்ளது. 274 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களும் இந்த 7,382 காலி பணியிடங்களில் அடக்கம். காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மொழியில் 100 கேள்விகள், பொது அறிவில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில், தமிழில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.