தங்கமாக மாறும் தக்காளி.. சதம் அடிச்சிடுச்சு.. கோயம்பேட்டில் திடீரென மாறிய காட்சிகள்
சென்னை: விளைச்சல் இயல்பாக இருந்தும் வரத்து குறைவு காரணமாக சென்னையில் தக்காளி விலை ரூ.100ஐ தொட்டிருக்கிறது. அதேபோல பீன்ஸ், இஞ்சியின் விலையும் ரூ.100ஐ தொட்டிருக்கிறது.
சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் இடமாக கோயம்பேடு சந்தை இருக்கிறது. இந்த சந்தைக்கு தினமும் 1,200 டன் காய்கறிகள் வரும். ஆனால் பருவமழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக குறிப்பிட்ட அளவில் காய்கறிகள் வரவில்லை. குறிப்பாக 85 லாரிகளில் தினமும் 750 டன் தக்காளி சென்னைக்கு வரும்.
ஆனால் இன்று வெறும் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்திருக்கிறது. அதாவது தக்காளி வரத்து பாதியாக குறைந்திருக்கிறது. எனவே விலை அதிகமாக இருக்கிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "கடந்த மாதம் முழுவதும் தக்காளி கிலோ.10 ரூபாய்க்குதான் விற்பனையானது. மேலும் அதிக அளவில் மீதமிருந்ததால் நாங்கள் கொட்டிவிட்டோம். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. வழக்கமாக வரும லோடு எதுவும் இன்று வரவில்லை.

மொத்த வியாபாரிகளான எங்களுக்கு போதுமான அளவு தக்காளி வராதபோது சில்லறை வியாபாரிகளுக்கு எப்படி தக்காளி கிடைக்கும்? எனவே தற்போது எங்களுக்கு கிடைத்துள்ள லோடை கொண்டு வியாபாரம் செய்து வருகிறோம். வரத்து பற்றாக்குறைதான் இந்த விலையேற்றத்திற்கு காரணம். மட்டுமல்லாது சில வியாபாரிகள் குளிர்சாதன கிடங்கில் சேமித்து வைத்து அடுத்த நாளும் விற்பனை செய்கின்றனர்.
ஆனால் எல்லா வியாபாரிகளுக்கும் இது சாத்தியமில்லை. எனவே அரசு குளிர்சாதன கிடங்குகளை கட்டி தர வேண்டும். அப்போதுதான் வியாபாரிகள் காய்கறிகளை சேமித்து வைத்து தட்டுப்பாடு ஏற்படாமல் விற்பனை செய்ய முடியும். தற்போது 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.800-900 வரை வாங்கி வருகிறோம்" என்று கூறுகின்றனர்.
வெளி மாநிலங்களிலிருந்தும் தக்காளி போதுமான அளவில் வராததும் இந்த திடீர் விலையேற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. தக்காளி மட்டுமல்லாது பீன்ஸ் மற்றும் இஞ்சியும் கிலோ ரூ.100ஐ தொட்டிருக்கிறது. இதனால் சென்னை மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications