மத்திய மேற்கு வங்க கடலில் நாளை உருவாகும் புயல்... தமிழகத்தில் வெயில் சுடுமா..மழை குளிர்விக்குமா?
ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில், நாளை புயல் உருவாகும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியுள்ள, காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில், நாளை புயல் உருவாகும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி இருந்தது. வேலூரில் 105.98 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பநிலை பதிவானது. தஞ்சை, திருத்தணி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி, தொண்டி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பல ஊர்களில் வெயில் வாட்டி எடுத்தாலும் வெப்பச்சலனத்தால் மாலை நேரங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியுள்ள, காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எட்டாம் தேதியன்று புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, 10ஆம் தேதியன்று ஆந்திரா- ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்க கடல், மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் 5 நாட்களுக்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அதேநேரம், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் வெப்பநிலை, இயல்பை விட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
