• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சசிகலாவிற்கு பல மணிநேரம் காத்திருந்து கொடுத்த வரவேற்பு... நன்றி கடிதம் எழுதிய டிடிவி தினகரன்

|

சென்னை: உலக வரலாற்றில் எதனோடும் ஒப்பிடமுடியாத பாசத்தை உங்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ட போது என்னையும் அறியாமல் கண்கள் கலங்கித்தான் போயின என்று டிடிவி தினகரன் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரசியல் வரலாறு இதுவரை காணாத வரவேற்பை நம்முடைய தியாகத் தலைவி சின்னம்மா அவர்களுக்கு வழங்கிய நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக ஊருக்கு போய் சேர்ந்த நிம்மதியோடும் மன நிறைவோடும் இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 8ஆம் தேதி முதலே பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவிந்த படியே இருக்கின்றன. வழிநெடுக தொடர்ந்து இவ்வளவு நேரம் ஓரிடத்தில் கூட உற்சாகம் குறையாத உணர்வுபூர்வமான வரவேற்பை வரலாறு பார்த்ததில்லை. ஆளும் தரப்பிலிருந்து அத்தனை மூலைகளிலும் கொடுக்கப்பட்ட அழுத்தங்களையும் போடப்பட்ட தடைகளையும் மீறி இந்த வரலாற்று சாதனை எவ்வாறு நிகழ்ந்தது? லட்சக்கணக்கானோர் திரண்டு ஒரு சிறு வன்முறை முறை கூட இல்லாமல் ராணுவ கட்டுப்பாட்டு இருந்ததெல்லாம் எப்படி சாத்தியம்?

TTV Dinakaran writes thank you letter to workers

கூட்டம் கூட்டுவது தொண்டர்களை தூண்டிவிட்டு வன்முறையை நிகழ்த்தி பொதுச் சொத்துக்களை சூறையாடி மக்களை அச்சுறுத்தி பலத்தை காண்பிக்க தான் என்று நினைக்கும் சில தலைவர்களுக்கு மத்தியில் நீங்கள் மட்டும் எப்படி இந்த மாயாஜாலத்தை நிகழ்த்தினார்கள்? என்றெல்லாம் மாற்று முகாம்களில் இருப்பவர்கள் ஊடகத்துறையினர் உயர் அதிகாரிகள் என பலரும் வியப்பில் விழிகள் விரிய கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அத்தனைக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை தொண்டர்களான நீங்கள்தான் காரணம் என்பதையும் இந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்களைத்தான் சேர வேண்டும் என்பதையும் அவர்களுக்கு பதிலாக கூறி வருகிறேன்.

ஆமாம்.. திருவிழாக்கோலம் பூண்டு நம் அன்னையை வரவேற்போம் என்ற என் அன்பு வேண்டுகோளை அட்சரம் பிசகாமல் மெய்ப்பித்து 'வெறும் திருவிழா அல்ல தமிழகத்தின் பெருவிழா' என்று நடத்திக் காண்பித்தது அவர்கள் நீங்கள் தானே.. ஆறு ஏழு மணி நேரத்தில் பயணித்து வர வேண்டிய தூரத்தை கடப்பதற்கு ஒரு நாள் முழுக்க ஆகிவிடும் என்று யாருமே எதிர்பார்க்காத நிலையில் மணிக்கணக்கில் காத்து இருந்த சோர்வு எந்த இடத்திலும் உங்கள் முகத்தில் கொஞ்சமும் இல்லையே.

அதிலும் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்து எல்லாம் திரண்டு வந்து பழங்காலத்தில் படைகள் முதல் நாளிலிருந்து தங்கி டீக்கடைகள் கூட இல்லாத இடங்களில் கட்டுச் சோற்றை சாப்பிடும் சாலையோரங்களில் அடுப்பு மூட்டி உப்புமா கிச்சடி செய்து பசி ஆறியும் இரண்டு நாட்களாக காத்திருந்த தங்களின் உண்மையான அன்பினை வழிநெடுக பார்த்தபோது மெய்சிலிர்த்துப் போனேன். உலக வரலாற்றில் எதனோடும் ஒப்பிடமுடியாத பாசத்தை உங்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ட போது என்னையும் அறியாமல் கண்கள் கலங்கித்தான் போயின.

எண்ணிலடங்காத இடையூறுகளுக்கும் அதிகாரம் கொண்டு உருவாக்கப்பட்ட தடைகளுக்கும் இடையில் நம் அன்னையை கண்டவுடன் உங்களின் முகங்களில் ஏற்பட்ட மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் காண கண்கோடி வேண்டியிருந்தது.

நாங்களெல்லாம் உண்மையின் பக்கமும் தியாகத்தின் பக்கம் நிற்கிற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை தொண்டர்கள் என்று எத்தனையோ முறை நெஞ்சு நிமிர்த்திப் பேசி இருக்கிறேன். அது துளியும் பிசகாத உண்மையிலும் உண்மை என்பதை ஒவ்வொரு கணமும் நீங்கள் நிரூபித்துக் காட்டி அதை எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

 
 
 
English summary
AMMK General Secretary TTV Dinakaran has written a statement thanking the volunteers who welcomed Sasikala along the way.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X