உதயநிதி ஸ்டாலின் கன்னிப் பேச்சுக்கு உடனே பலன்.. நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல்- ஸ்டாலின் உறுதி
சென்னை: நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே, தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு பாதிப்பு குறித்து நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்து இந்த சட்ட முன்வடிவு நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்ற உறுதி மொழியை சட்டசபையில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார்.

நீட் தேர்வு நடைபெறுகிறது
மருத்துவ கல்விக்கான பொது நுழைவுத்தேர்வான நீட்டை தமிழகத்தில் செயல்படுத்த கூடாது என்பது முந்தைய அதிமுக அரசு மற்றும் இப்போது திமுக அரசின் வாதமாக இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் உறுதியாக இருப்பதால் நீட்தேர்வு இந்த வருடமும் நடத்தப்பட உள்ளது.

ஆய்வு குழு
ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , நீட்தேர்வு நடைபெறாது என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான், ஆட்சிக்கு வந்த பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து நீட் தேர்வின் பாதிப்புகள் பற்றி விசாரிக்க கோரியது அரசு.

ஏ.கே.ராஜன் குழு அறிக்கை
நீதிபதி ராஜன் குழு பெற்றோர்களிடம் நீட் தேர்வு தொடர்பாக கருத்துக்களை கேட்டது. இதில் பலரும் நீட் தேர்வுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி ராஜன் தலைமையிலான குழு 160 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் கடந்த மாதம் சமர்ப்பித்தது. இந்த நிலையில் தான் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு இந்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே, கொண்டுவரப்படும் என்று ஸ்டாலின் என்று அறிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கன்னிப் பேச்சு
இன்றைய சட்டமன்றத்தில் விவாதத்தின் போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது கன்னிப் பேச்சை பேசினார். ஆம்.. இதுதான் அவரது முதல் சட்டசபை பேச்சாகும். முதல் பேச்சிலேயே, நீட் தேர்வு பற்றிதான் அதிகம் பேசினார். தமிழக மக்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா பெயரை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சூட்டவேண்டும் என்று உதயநிதி கோரிக்கை வைத்தார் .

ஸ்டாலின் பதில்
இதற்கு பதில் அளித்து பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கையை ஆய்வு செய்து நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில், நீட் தேர்வுக்கு எதிராக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று உறுதியளித்தார் ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினின் கன்னிப்பேச்சு கோரிக்கைக்கு, சக்சஸ் உடனே கிடைத்துவிட்டது.
Recommended Video

அதிமுக நிறைவேற்றிய தீர்மானம்
நீதிபதி ராஜன் குழு அளித்த அறிக்கையின் சாராம்சம் படி இந்த சட்ட முன்வடிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் இருக்கும் நிலையில்தான் புதிய சட்ட மசோதா கொண்டுவர தேவை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் அரசு வட்டாரத்தில்.

குழப்பம் வேண்டாம்
சட்ட மசோதா நிறைவேறினாலும் கூட, இந்த வருடம் நீட் தேர்வு நடைபெறும் என்பதால் மாணவர்கள் குழப்பம் அடையத் தேவையில்லை. சட்டம் நிறைவேற்றப்பட்டு அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் அடுத்த வருடம் முதல் நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதுவும் போகப்போகத்தான் தெரியவரும் என்கிறார்கள் அரசு வட்டாரத்தில்












Click it and Unblock the Notifications