டேட்டிங் ஆப்களில் திடீரென அதிகரித்த யூசர்ஸ்.. வேக்சின் போட்டால் குவியும் ரெக்யூஸ்டுகள்.. சுவாரசியம்
சென்னை: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில் டேட்டிங் ஆப்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இன்னொரு பக்கம் கொரோனா வேக்சின் போட்டவர்களுக்கு டேட்டிங் ஆப்களில் நிறைய ரெக்யூஸ்டுகள் குவிந்து வருவதாகவும் கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸ் எந்த அளவிற்கு உடலை பாதிக்கிறதோ அந்த அளவிற்கு மனதையும் பாதிக்கிறது. கொரோனாவில் இருந்து மீண்ட பலர் தனிமையாக உணர்வதும், லாக்டவுனில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பலர் நல்ல துணை இன்றி கஷ்டப்படுவதும் அதிகரித்து வருகிறது.
முக்கியமாக காதலர் இல்லாதவர்கள் லாக்டவுன் சமயங்களில் அதிக தனிமையை உணர்கிறார்கள். இதனால் தற்போது டேட்டிங் ஆப்களில் பலர் சமீப நாட்களாக இணைந்து, தங்கள் வாழ்க்கை துணை அல்லது காதலை தேட தொடங்கி உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் ஓகே கியூபிட், பம்ப்பிள், டின்டர், ட்ருலீ மேட்லி, ஐஸில், ஹின்ச் என்று பல டேட்டிங் ஆப்கள் உள்ளன. இந்த ஆப்கள் எல்லாம் தங்களுக்கு என்று தனி தனி விதிகளை வைத்துள்ளன. ஆனால் இதன் ஒரே நோக்கம், உங்களுக்கான இணையை, காதலரை, அல்லது டேட்டிங் செய்ய நண்பரை தேடிக்கொடுப்பதுதான். லாக்டவுன் காலத்தில் தனியாக இருக்கும் பலர் தற்போது டேட்டிங் ஆப்களை நாட தொடங்கி உள்ளனர்.

டேட்டிங்
இந்த இரண்டாம் அலை கொரோனா தாக்குதலுக்கு பின் டேட்டிங் ஆப்களில் 20-25% பயனாளர்கள் அதிகரித்து இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது. தற்போது இருக்கும் சில டேட்டிங் ஆப்களில் வீடியோ சாட் செய்யும் வசதியும் உள்ளது. அதேபோல் சில டேட்டிங் ஆப்கள் "கடலை" போடுவது என்பதை தாண்டி, திருமணம் செய்யும் அளவிற்கு உறவுகளை இணைக்க தொடங்கி உள்ளது.

ஐசில்
Aisle என்ற டேட்டிங் ஆப்பில் கடந்த ஒரு மாதத்தில் யூசர்கள் எண்ணிக்கை 28% உயர்ந்துள்ளது. அதேபோல் தினசரி பயன்படுத்தும் யூசர்களின் எண்ணிக்கை 25% உயர்ந்துள்ளது என்று Aisle செயலின் சிஇஏ அபில் ஜோசப் தெரிவித்துள்ளார். லாக்டவுன் காரணமாக பலர் இப்படி டேட்டிங் ஆப்களை இன்ஸ்டால் செய்வதாகவும், நேரம் செல்ல செல்ல இதிலேயே பலர் மொத்தமாக மூழ்கிவிடுவதாகவும் Aisle செயலி தெரிவித்துள்ளது.

திருமணம்
சாட்டிங், டேட்டிங் என்பதை தாண்டி பலர் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தில் கூட டேட்டிங் கணக்குகளை தொடங்குகிறார்கள். இதனால்தான் 30 வயதை தாண்டிய பலர் பிரீமியம் கணக்குகளை டேட்டிங் செயலியில் தொடங்குவதாக Aisle செயலியின் சிஇஓ தெரிவித்துள்ளார். இதன் மூலம் எளிதாக எதிர்பாலின கணக்குகளை பின் தொடர முடியும். பம்பில் செயலி எடுத்த கணக்கெடுப்பு ஒன்றில் இந்தியாவில் 38% பேர் இந்த வருடம் எப்படியாவது காதலில் விழுந்து கமிட் ஆகிவிட வேண்டும் என்று நம்பிக்கையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வேக்சின்
அதோடு டேட்டிங் ஆப்கள் சிலவற்றில் நீங்கள் கொரோனா வேக்சின் போட்டுக்கொண்ட தகவலை பதிவிட முடியும். இப்படி வேக்சின் போட்டுக்கொள்ளும் நபர்களாகியே எதிர்பாலினர் அதிகம் விரும்புவதாக கணக்கெடுப்பு கூறுகிறது. இது தொடர்பாக ஓகேக்யூபிட் செயலியின் மார்க்கெட்டின் இயக்குனர் அனுகுள் குமார் அளித்துள்ள பேட்டியில், எங்கள் டேட்டிங் ஆப்பில் கொரோனா வேக்சின் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

வேக்சின் எடுத்தால் காதல்
இதில் வேக்சின் எடுத்ததாக கூறிய நபர்களுக்கு வேக்சின் எடுக்காதவர்களை விட 25% கூடுதல் லைக்குகள், ரெக்யூஸ்டுகள் வந்துள்ளன. அதேபோல் 41% பெண்கள் வேக்சின் எடுக்காத ஆண்கள் உடன் டேட்டிங் செல்ல மாட்டோம் என்றுள்ளனர். 30% ஆண்கள் வேக்சின் எடுக்காத பெண்களுடன் டேட்டிங் செல்ல மாட்டோம் என்று கூறியுள்ளனர், என்று ஓகேக்யூபிட் செயலியின் மார்க்கெட்டின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

செயலி எப்படி?
ஓகேக்யூபிட் செயலியில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 26% கூடுதல் சாட்களை பதிவு செய்துள்ளது. அதேபோல் ட்ரூலிமேட்லி செயலியில் 25-30% கூடுதல் நபர்கள் இணைந்து சாட்களை செய்து வருகிறார்கள். லாக்டவுன் தனிமை, கொரோனா அழுத்தம் என்று பல காரணங்களால் மக்கள் இப்படி டேட்டிங் தளங்களை நாடுவதாக இந்த ஆப்கள் குறிப்பிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications