மக்கள் மீது கொண்ட அக்கறையை விட எந்த சக்தியும் பெரியதல்ல.. வைரமுத்து பேட்டி
சென்னை : மக்கள் மீது கொண்ட அக்கறையை விட எந்த சக்தியும் பெரியதல்ல என்றும், சமூக அக்கறையோடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்பட்டதனால் வெள்ளம் தானே கொஞ்சம் வடிந்தது என்றும் தடிகொண்டு அடித்ததிலும் கொஞ்சம் வடிந்தது என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் கனமழை பெய்த காரணத்தால் கடந்த மூன்று நாட்களாக வெள்ளத்தில் மிதந்தது. நேற்று முன்தினம் முதல் மழை இல்லாத காரணத்தால் வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது.
மழை நீர் வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன. பல்வேறு இடங்களில் வெள்ள நீர் அகற்றப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உணவு குடிநீர்
அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதேபோல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களும் அரசு சார்பிலும், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் சார்பிலும் வழங்கப்படுகிறது.

500 குடும்பங்கள்
இந்நிலையில் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் சேகர் பாபு, கவிஞர் வைரமுத்து மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் உணவு பொருட்களை வழங்கினர். 5 கிலோ அரிசி மற்றும் 10 வகை மளிகைப் பொருட்கள் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

தலைவன் வழி
அப்போது வைரமுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "தலைவன் எவ்வழி அரசு அவ்வழி, அமைச்சர் முன் நடந்தார் அதிகாரிகள் பின் நடந்தார்கள் அதிகாரிகள் பணியாற்றினார்கள். ஒரு அரசன் தூங்காமல் இருக்கும் போது அமைச்சர்களும் தூங்க மாட்டார்கள். தளபதி தூங்காமல் செயலாற்றிய போது அமைச்சர்களும் அவருக்கு இணையாக ஓடிவந்தார்கள்.

ஸ்டாலினுக்கு பாராட்டு
தமிழ்நாட்டு மக்களின் துயரத்தை துடைப்பதற்கு அதிகாரம் முக்கியமல்ல, அரசு எந்திரம் முக்கியமல்ல, மக்கள் மீது கொண்ட அக்கறை தான் முக்கியம். மக்கள் மீது கொண்ட அக்கறையை விட எந்த சக்தியும் பெரியதல்ல. சமூக அக்கறையோடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்பட்டதனால் வெள்ளம் தானே கொஞ்சம் வடிந்தது. நாங்கள் தடிகொண்டு அடித்ததிலும் கொஞ்சம் வடிந்தது" என்றார்.












Click it and Unblock the Notifications