இது கடைசி எச்சரிக்கை.. உஷார் ஆகி ஊட்டி, கொடைக்கானலை காப்பாத்துங்க.. வேல்முருகன் வைத்த கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலநிலை பருவ மாற்றத்தின் கடைசி எச்சரிக்கை தான் வயநாடு நிலச்சரிவு என்றும் இதில் இருந்து பாடம் கற்று, ஊட்டி, கொடைக்கானல், கோத்தகிரி, குன்னூர், வால்பாறை ஆகிய பகுதிகளை ஆபத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் செயல்பட்டு வரும் குவாரிகளையும், சுரங்கங்களையும் இழுத்து மூட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது வரை 280க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் மாயமான நிலையில் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

wayanad landslide kerala

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வணிக நோக்கத்துக்காக அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டு தோட்டப்பயிர்கள் விளைவிக்கப்படுவதும், வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டு, நில அமைப்பே மாற்றப்பட்டதும் நிலச்சரிவுக்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கேரளாவில் நடந்துள்ள இந்தப் பேரிடரைப் பார்த்து தமிழகம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்.

இதுதொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வயநாடு மாவட்டத்தின் வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில், ஜூலை 30 அன்று, அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு மற்றும் சாலியார் உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பல குழந்தைகள் மண்ணில் புதையுண்டு பலியான நிகழ்வு நெஞ்சை பதற வைக்கிறது.

சூரல்மலையில் உள்ள ஆற்றுப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் முண்டக்கையில் சிக்கியிருக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்க முடியாத நிலை இருப்பதாகவும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இத்துயர நிகழ்வை இயற்கைப் பேரிடர் என்று இயற்கையின் மீது மட்டும் பழிபோட்டு நாம் எளிதில் கடந்துவிட முடியாது.

காட்டுத் தீ, பெரும் புயல்கள், அதிதீவிர மழை, அதீத வெப்பம், பனிப்பாறை உருகுவது, கடல் மட்டம் உயர்வது, கொள்ளை நோய்கள் உள்ளிட்ட காலநிலை பருவ மாற்றமே காரணம். இந்த பருவ மாற்றத்திற்கும், ஒவ்வொரு இயற்கை சீற்றத்திற்கும் மனித இனத்தின் பேராசைகளும், அவர்களின் செயல்பாடுகளுமே அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.

குறிப்பாக, இந்த மண்ணின் மீது மனித சமூகம் நிகழ்த்திய வன்முறைக்கான எதிர்வினையை இப்போது நாம் அனுபவிக்கிறோம். உலகில் வல்லரசு நாடுகளெல்லாம், காலநிலை மாற்றத்தில் கவனம் செலுத்தி, அதற்கேற்றார் போல் செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்திய ஒன்றிய அரசோ, மாநில அரசுகளோ, அதில் சிறிதும் கூட கவனம் செலுத்தவில்லை என்பதற்கான சான்று வயநாடே!

வயநாடு மாவட்டத்தில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வைத்திரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இப்படி ஒரு விபத்து நடக்கும் என்பதை பல ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தனர். ஜூன் 2018ல் கோழிக்கோடு, கன்னூர், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அங்கு ஒரு ஆய்வை மேற்கொண்டது.

அந்த ஆய்வில் நிலச்சரிவு ஏற்பட பெருமழை ஒரு காரணம் என்றாலும், பல இடங்களில் அறிவியல்பூர்வமற்ற வகையில் மலைச்சரிவுகளில் ஏற்படுத்தப்பட்ட கட்டிடங்களும் நிலச்சரிவுக்கு முக்கியக் காரணம் எனக் கண்டறிந்தது. இயற்கையாக அமைந்த மலைச்சரிவுகள் மற்றும் மலைமுகடுகளைத் தோண்டி, பிளந்து கட்டிடங்களை எழுப்பி அப்பகுதியின் நில அமைப்பியலே மாற்றப்பட்டுவிட்டது.

பெரும் அளவில் மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவாக மணலை இறுகப்பிடிக்கும் வேர்கள் இல்லாததன் காரணமாக, நிலச்சரிவை தாங்கும் திறனை மண் இழந்திருக்கிறது. இத்தன்மையை இழந்த நிலப்பரப்பில் அதிதீவிர மழைப்பொழிவு மணல் அரிப்பையும், இவ்வாறான மணல் சரிவையும் அடிக்கடி ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்ச்சியாக நிலப் பயன்பாடு மாற்றம், வரைமுறையற்ற கட்டுமானங்கள், காடழிப்பு, காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் அதிகரிக்கும் மழைப்பொழிவு ஆகியவையே இந்தப் பேரழிவுக்குக் காரணம். நிலம் வலுவிழப்பதைக் காடழிப்புடனும், நிலச்சரிவைப் பெருமழையுடனும், பெருமழையைக் காலநிலை மாற்றத்துடனும் தொடர்புபடுத்திப் பார்க்க நாம் தவறினால் இப்பேரழிவுகளைத் தடுக்க முடியாது.

எனவே, வயநாடு கனமழை மற்றும் நிலச்சரிவில் இருந்து, தமிழ்நாடு அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஊட்டி, கொடைக்கானல், கோத்தகிரி, குன்னூர், வால்பாறை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட பகுதிகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகள் என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்களை அப்புறப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் செயல்பட்டு வரும் குவாரிகளையும், சுரங்கங்களையும் இழுத்து மூட வேண்டும். எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக்கூடாது.

தமிழ்நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் நீர்மின் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யவோ, புதிய நீர்மின் திட்டங்களைத் தொடங்கவோ கூடாது. மலைப்பகுதிகள் மட்டுமின்றி, இயற்கைக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஆலைகளையும், தொழிற்சாலைகளையும் இழுத்து மூட வேண்டும்.

மாறாக, இயற்கைக்குத் தீங்கு விளைவிக்காத தொழில்களை உருவாக்க வேண்டும்; ஊக்கப்படுத்த வேண்டும். வயநாடு கனமழை மற்றும் நிலச்சரிவில், தக்கப் படிப்பினைக் கற்றுக்கொண்டு, புதியதொரு சூழலை உருவாக்க, தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+