சந்திரமுகி கங்காவாக மாறிய விஜய், ஓபிஎஸின் ஸ்லீப்பர் செல்? கூடு விட்டு கூடு பாயும் வித்தை: Exclusive
சென்னை: திமுகவை வீழ்த்தியது அதிமுகதான் என்பதால், அந்த வாக்குகளை தவெகவுக்கு மடைமாற்ற நினைக்கிறார் தவெக தலைவர் விஜய்.. திமுகவை மட்டும் பிரதான எதிரியாக காட்டி அரசியல் செய்வது விஜய்க்கு ஒரு தற்காலிக உற்சாகத்தை தரலாமே தவிர, அது நீண்ட காலத்திற்கு பலன் தராது என்று நம்முடைய oneindia.tamil யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.. அந்த பேட்டியில் விஜய்யின் அரசியல் அணுகுமுறை குறித்தும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்..
விஜய்யின் சமீபத்திய பேச்சுகள் அவரது நம்பிக்கையின் வெளிப்பாடா, வெறும் அரசியல் கனவா? விஜய் தனது பிரதான எதிரி திமுக என்று அறிவித்திருப்பது அக்கட்சிக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்? அதிமுகவின் வாக்கு வங்கியை எப்படி குறிவைக்கிறார்? பாஜகவை விமர்சிக்காமல் தவிர்ப்பது மற்றும் அதிமுகவை நேரடியாக எதிர்க்காமல் இருப்பது விஜய்யின் அரசியல் சூழ்ச்சியா புரிதலின்மையா? தன்னை எம்ஜிஆருடன் ஒப்பிட்டு பேசுவது பொருத்தமானதா? என்றெல்லாம் ஒன் இந்தியா தமிழ், கோட்டீஸ்வரனிடம் கேள்விகளை முன்வைத்தது..

பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்
மேற்கண்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் விரிவான பதிலை தந்துள்ளார்.. அதன் சுருக்கத்தை இங்கே பார்க்கலாம்..
"அண்ணாவின் கொள்கைகளை பேசும் விஜய், அவரது நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த தவறியது ஒரு தலைவராக அவருக்கு முரணாக இல்லையா? அதிமுகவின் அரசியல் பாணியை கையாண்டு அந்த இடத்தை பிடிக்க விஜய் முயற்சிக்கிறார்..
கூடு விட்டு கூடு பாயும்
காரணம், கட்சி இத்தனை காலமாகியும் சொந்தமாக உருவாக்கி பேசி, உருவாக்க முடியவில்லை.. கூட்டணியை உருவாக்க முடியவில்லை.. அதிமுகவின் உடம்பிற்குள் புகுந்து "கூடு விட்டு கூடு பாயும்" முயற்சியில் ஈடுபடுகிறார்.. அப்படித்தான் அதிமுகவை பயன்படுத்தி கொண்டுள்ளார்..
கங்கா சந்திரமுகியாக மாறுவதை போல தன்னை நினைத்து கொண்டிருக்கிறார்.. அதனால்தான் தன்னை ஜெயலலிதா, எம்ஜிஆர் என்றெல்லாம் சொல்கிறார்.. அதிமுகவின் வாக்கு வங்கியைத் தன் பக்கம் இழுக்க விஜய் திட்டமிடுகிறார்.. எனவே அக்கட்சியை முழுமையாக விமர்சிக்காமல் ஒரு மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்.. ஓபிஎஸ்ஸின் ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோ? என்றுகூட டவுட்டாக உள்ளது..
ஜெயலலிதா உட்பட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மீதான ஊழல் புகார்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விஜய் ஏன் மவுனம் காக்கிறார்?
அதிமுக வாக்குகள் மடைமாற்றம்?
திமுகவை வீழ்த்தியது அதிமுகதான் என்பதால், அந்த வாக்குகளை தவெகவுக்கு மடைமாற்ற நினைக்கிறார்.. திமுகவை மட்டும் பிரதான எதிரியாகக் காட்டி அரசியல் செய்வது விஜய்க்கு ஒரு தற்காலிக உற்சாகத்தைத் தரலாமே தவிர, அது நீண்ட காலத்திற்குப் பலன் தராது
அதேபோல வீட்டை விட்டு வெளியே வராமல் "ஒர்க் ஃப்ரம் ஹோம்" பாணியிலேயே அரசியல் செய்கிறார்.. எம்ஜிஆர், விஜயகாந்த் போன்ற தலைவர்கள் மக்களுடன் கொண்டிருந்த நெருக்கமான பிணைப்பு விஜய்யிடம் இல்லை.. தொண்டர்களை தனது குடும்பம் என்கிறார்.. ஆனால் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்தாரா? நிர்வாகிகள், தொகுதிகளை பற்றிய ஆழமான புரிதல் இல்லாமல் முதல்வராக வேண்டும் என்ற அவரது கனவு சாத்தியமில்லை.
திமுக மட்டுமே குறி
ஒரு மாநிலத்தின் முக்கிய பிரச்சனையே சட்ட ஒழுங்குதான்.. சைபர் கிரைம், பெண்களுக்கான பாதுகாப்பு போன்றவைகளில் இதுவரை விஜய்க்கு போதிய புரிதல் இல்லை.
அண்ணாவின் நினைவு நாளில் அவருக்கு உரிய மரியாதை செலுத்தத் தவறியது, பாஜகவை பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது எல்லாமே விஜய்யின் அரசியல் முதிர்ச்சியின்மைதான்.. தன்னை ஒரு மாற்றுச் சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள விரும்புபவர்,முதலில் ஒரு முழுநேர அரசியல்வாதியாகக் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்.. 234 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும்..
"பொத்தி பொத்தி வளர்த்த மேகலை, இன்னும் விட்டு போகல" என்று சோஷியல் மீடியாவில் கேலி செய்கிறார்கள்.. ஒரு பெரிய அரசியல் ஆளுமைக்கு இத்தகைய விமர்சனங்கள் வருவது ஆரோக்கியமானது அல்ல.. தனது பலவீனங்களை மறைக்க எம்ஜிஆரின் பிம்பத்தைப் பயன்படுத்துகிறார்.. 2024 தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களை விஜய் தவிர்த்தது, அவருக்கு போதிய தைரியம் இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது..
ஊழல்வாதி - தீய சக்தி
டிஜிபி பதவி, போக்சோ சட்டங்கள், சைபர் கிரைம் போன்ற அடிப்படை விஷயங்கள் குறித்து விஜய் பேச தயங்குகிறார்.. காவலர்கள் படும் பிரச்சனையை இதுவரை இவர் பேசியிருக்கிறாரா? அரசு எப்படி இயங்குகிறது என்றுகூட விஜய்க்கு தெரியாது.. அதேபோல மற்றவர்களை ஊழல்வாதி என்று சொல்லும் முன் விஜய் தன்னை சுற்றியுள்ள விஷயங்களை கவனிக்க வேண்டும்..
திமுகவை "தீய சக்தி" என்று விமர்சிக்கும் விஜய், பாஜகவின் வரிச்சுமை அல்லது மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து எந்தவொரு ஆக்கப்பூர்வமான விமர்சனத்தையும் முன்வைப்பதில்லை.. மோடி பற்றியோ, அமித்ஷா பற்றியோ, நிர்மலா சீதாராமன் பற்றியோ இதுவரை விஜய் பேசுவதில்லை. சிபிஐ விசாரணை முடியும்வரை விமர்சிக்க போவதுமில்லை...
மற்றவர்களுக்கு தன் மீது டவுட் வரக்கூடாது என்பதற்காக வேண்டுமானால், தேர்தல் சமயத்தில் அவர்களிடம் சொல்லிவிட்டு, லேசாக பாஜகவை விமர்சனம் செய்யலாம்.. ஆனால் அது ஆக்கப்பூர்வமாக விமர்சனமாக இருக்க போவதில்லை..
செங்கோட்டையன் யார்
விஜய்யின் அரசியல் பயணம் "டிசைன் டிசைனாக"ப் பேசுவதோடு முடிந்துவிடக் கூடாது.. கள யதார்த்தத்தை அவர் சுற்றிலும் உற்று நோக்க வேண்டும்.. கட்சியில் புதிது புதிதாகப் பல நபர்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் யார், அவர்களது தொழில் என்ன, அவர்கள் மீது ஏதேனும் குற்றப் பத்திரிகைகள் நிலுவையில் இருக்கிறதா என்பதை விஜய் கவனிக்க வேண்டும்..
அண்ணா அண்ணா என்கிறாரே விஜய், செங்கோட்டையன், ஜேசிபி பிரபாகரன், மீதெல்லாம் ஊழல் வழக்கு நடந்ததா இல்லையா? குப கிருஷ்ணன் யாரு? லாட்டரி சீட்டு ஆதவ் அர்ஜுனா யாரு? பிறர் மீது கல்லெறியும் முன் யோசிக்கணும்..
விஜய்யின் பேச்சுகள் தொண்டர்களுக்கு ஒரு "டானிக்" போல உற்சாகத்தைத் தருமே தவிர, வேறு பலனில்லை.. மக்களிடம் சென்று பணியாற்றுவதை விட தனது பிம்பத்தை நம்பியே அரசியல் செய்கிறார்.. வெறும் சினிமா வசனங்களை பேசிவிட்டு போவது எடுபடாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications