விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் கூட்டணி அமைப்போம்.. தவெக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!
சென்னை: சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில், அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில், அக்கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. புதுச்சேரி மக்கள் சந்திப்பை தொடர்ந்து நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அண்மையில் கட்சியில் இணைந்த செங்கோட்டையன் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூரில் தொடங்கியது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல் குமார், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிகள், சிறப்பு திருத்தப் பணிகள், அடுத்த கட்ட மக்கள் சந்திப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் தொடர்பாக ஆலோசனை ஆலோசிக்கப்படுகிறது.
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1 :
ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக நமது வெற்றித் தலைவர் விஜய் அவர்களை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும் நமது கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவர் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 2:
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் "தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு" அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 3 :
இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, நம் தமிழக மக்களைக் காக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் "தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு" அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 4 :
அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைகூவல் பொய்யுரைகளை தோலுரித்து, எதிரிகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
கரூர் துயரச் சம்பவத்துக்கு 72 நாட்கள் கழித்து, புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நேற்று முன்தினம் தவெக பொதுக்கூட்டம் நடந்தது. அடுத்தடுத்து மகக்ள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
ஈரோட்டில் தவெக சார்பில் விஜய் பிரச்சார கூட்டம் வருகிற 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் பிரசார கூட்டம் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications