எப்படி வெளியே போச்சு? ஆனந்திடம் கடுகடுத்த விஜய்! இரவோடு இரவாக முக்கிய மீட்டிங்! வெளியாகும் அறிவிப்பு
சென்னை: தமிழக அரசியல் களம் தேர்தலை முன்னிட்டு சூடுபிடித்து வரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், டெல்லியில் இருந்து சென்னை திரும்பியதும், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில், மிக முக்கிய அறிவிப்பொன்றை விஜய் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதிமுக - பாஜகவுடனான கூட்டணி குறித்த பரபரப்பு அதிகரித்தது. எண்டிஏவில் தவெக இணையும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், இந்த தகவல்கள் அனைத்தையும் தவெக தரப்பு மறுத்தது.
இந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுக்குள் பேசிய விவகாரங்கள் வெளியானதால் விஜய் அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கட்சிக்குள் சில நிர்வாகிகள் இடையே அதிகாரப் போட்டி நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் அவசர கூட்டம்
இதனால் ஏற்பட்ட குழப்பத்தை சரிசெய்யும் நோக்கிலும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், டெல்லி தரப்பில் இருந்து கூட்டணி அழைப்பு வந்ததாகவும், அதனைத் தவிர்க்கும் வகையில் விஜய் கடுமையான நிபந்தனைகள் முன்வைத்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக அதிக தொகுதிகள் மற்றும் முதல்வர் பதவி போன்ற நிபந்தனைகள் குறித்து விவாதங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி சென்ற விஜய்
ஆனால், இவை குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சென்ற விஜய், எந்த அரசியல் அழுத்தமும் இன்றி விசாரணையை சந்தித்துவிட்டு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அரசியல் ரீதியாக மேலும் தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கியுள்ளார் என்ற தகவலும் உலாவுகிறது. சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை களைய விஜய் நேரடியாக தலையிட்டு பேசினார் என கூறப்படுகிறது.
பாஜக - அதிமுக கூட்டணி
குறிப்பாக நிர்வாகிகள் இடையேயான முரண்பாடுகளை சரிசெய்து, தேர்தல் பணிகளில் ஒருங்கிணைப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "பாஜக - அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற தகவல்கள் முற்றிலும் தவறானவை. எந்த தரப்புடனும் எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், இந்த வதந்திகள் திமுக தரப்பிலிருந்து திட்டமிட்டு பரப்பப்படுகின்றன" எனக் கூறியிருந்தார்.
அரசியல் 'ஆஃபர்'கள்
அதே நேரத்தில், அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, விஜய் ஆரம்பத்திலிருந்தே பாஜக கூட்டணியில் இணைய விருப்பம் இல்லாதவராக இருந்துள்ளார் என கூறப்படுகிறது. கொள்கை ரீதியாக எதிரியாக கூறிய கட்சியுடன் இணைந்தால் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்ற கணிப்பில் அவர் உறுதியாக உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பெரிய அரசியல் 'ஆஃபர்'கள் முன்வைக்கப்பட்டதாகவும், முதல்வர் பதவி வாய்ப்பு வரை பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
தமிழக அரசியல்
இருப்பினும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தனித்த அரசியல் பாதையைத் தேர்வு செய்யவே விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் தவெக விஜய்யின் அறிவிப்பு முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் வியூகங்கள் ஆகியவை குறித்து தெளிவான நிலைப்பாடு வெளிவந்தால், தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பு உருவாகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications