விஜயபாஸ்கர் கண்ணசைவுக்கு கட்டுப்பட்ட அந்த 7 பேர்.. "சிக்குவார்".. அன்றே சொன்ன ஓபிஎஸ்.. நடந்துடுச்சே!
சென்னை : ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்த காலத்தில் விஜயபாஸ்கர் பற்றி பேசிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், டாக்டர் சிவக்குமார் ஆகியோரை குற்றவாளியாக கருதி விசாரனை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனால், சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த அறிக்கை பற்றி விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, முழுமையாக படித்துவிட்டு பதில் சொல்கிறேன் எனக் கூறி கேள்விகளைத் தவிர்த்தார்.

ஜெ. மரண மர்மங்கள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சமீபத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் பல்வேறு மர்மங்கள் வெளிவந்துள்ளன. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகங்கள் முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

4 பேர்
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டும் கடைசி வரை அந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை. சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை குற்றவாளிகளாக கருதி விசாரணை மேற்கொள்ளலாம் என அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்கள் ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

ஓபிஎஸ் பற்றி
அதேபோல, ஓபிஎஸ் பற்றியும் சில சந்தேகங்களை ஆணையம் எழுப்பியுள்ளது. ஜெயலலிதா இறந்தவுடன் காலம் தாழ்த்தாமல் முதல்வர் பதவிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் வாரிசாக ஓபிஎஸ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது தற்செயலான நிகழ்வு அல்ல. அதன் பின்னர் நடந்த அரசியல் சம்பவங்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால், கோபமடைந்து ஓபிஎஸ் தனது சுய லாபத்துக்காக தர்மயுத்தம் தொடங்கினார் என ஆறுமுகசாமி ஆணையம் கூறியுள்ளது.

வளையத்தில் சிக்கிய விஜயபாஸ்கர்
ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதை தடுத்ததில் விஜயபாஸ்கரும் முக்கியமானவராக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சராகவும் டாக்டராகவும் இருந்தும், ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல தேவையான முயற்சியை அவர் எடுக்காதது பற்றி ஆணையம் சந்தேகம் தெரிவித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள் விஜயபாஸ்கர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருப்பதால் அவருக்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

சந்தேகம் கிளப்பிய ஓபிஎஸ்
ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஓபிஎஸ் தவிர அதிமுக முன்னாள் அமைச்சர்களில் சிக்கியுள்ள ஒருவர் விஜயபாஸ்கர் தான். விஜயபாஸ்கர் இப்போது சிக்கியிருக்கும் நிலையில், தர்ம யுத்த காலத்திலேயே விஜயபாஸ்கர் மீது சந்தேகம் கிளப்பியவர் ஓ.பன்னீர்செல்வம் என்பது கவனிக்கத்தக்கது. 2017ல் சசிகலா தரப்பை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ், ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆக்டிங் முதல்வர்
அப்போது சசிகலா தரப்பில் இருந்த அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்றால் கண்டிப்பாக மாட்டப்போவது ஓ பன்னீர்செல்வம்தான். அவர்தான் ஆக்டிங் முதல்வர் போல செயல்பட்டார். அவர் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம்தான் இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளி எனக் கூறி இருந்தார்.

ஆல்ரவுண்டர்
அதற்கு பதிலடி தரும் விதமாக 2017 மார்ச் மாதத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஓ.பன்னீர்செல்வம். "விஜயபாஸ்கர்.. அவர் ஆல்ரவுண்டர் பிளேயர். ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லா மருத்துவமனையின் இரண்டாவது ஃப்ளோரில் தனது கையாட்கள் 7 பேரை அங்கு நிறுத்தி இருந்தார். நீதி விசாரணை அமைந்தால் முதலில் பன்னீர்செல்வத்தை தான் விசாரிக்க வேண்டி வரும் என்று சொல்கிறார். ஆனால், நீதி விசாரணை நடந்து உண்மை நிலவரம் வெளிவந்தால் யார் முதல் குற்றவாளி என்றால் விஜயபாஸ்கராகத் தான் இருப்பார்." எனப் பேசியிருந்தார்.

ஓபிஎஸ் வீடியோ
இப்போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் அதிர்ச்சியளிக்கும் வகையில், விஜயபாஸ்கரும் முக்கியமான நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்த காலத்தில் குற்றம்சாட்டியது போலவே விஜயபாஸ்கர் மீது சந்தேகக் கண் விழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ் அப்போது பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications