தமிழ்நாட்டில் வேலை இல்லையா? வேலை கொடுக்க நாங்கள் தயார்.. இளைஞர்களுக்கு விக்கிரமராஜா முக்கிய அட்வைஸ்!
தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வணிகர்கள் தயார் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் வேலை இல்லை என்று தங்களை ஏமாற்றிக் கொள்ளாமல் வேலை வாய்ப்புகளை தேடி இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். வடமாநில தொழிலாளர்கள் மாதம் ரூ.18 ஆயிரம் கோடியை வடமாநிலங்களுக்கு அனுப்புவதாக கூறிய அவர், இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் உழைக்க தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அண்மைக் காலமாக வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் குடிபெயர்வது சாதாரணமாகி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார வளர்ச்சியே காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதனால் உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தட்டுப்பாடு, வட இந்தியத் தொழிலாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி நகர காரணமாக உள்ளது.

வடமாநில தொழிலாளர்கள்
ஏற்கனவே முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் குடிபெயர்வு அதிகமாகி வருகிறது. இதனால் தமிழ்நாடு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோவதாக தொடர்ந்து சமூக மற்றும் அரசியல் தளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மோதல்
இதனால் வடமாநில தொழிலாளர்கள் - தமிழ்நாடு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வடமாநில தொழிலாளர்களின் குற்றங்களும் முக்கிய செய்தியாக மாறி வருவதும், அவர்களை பற்றிய பேச்சுகள் வர காரணமாக அமைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் குடியேறும் வடமாநில தொழிலாளர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

எங்கும் வடமாநில தொழிலாளர்கள்
அதேபோல் நாம் தமிழர் தமிழக வாழ்வுரிமை கட்சிகள் தமிழர்கள் வேலைவாய்ப்பு பறிபோவதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான மனநிலை தமிழ் மக்கள் மத்தியில் உருவாகி வருவதையும் பார்க்கப்படுகிறது. ஹோட்டல்கள், கட்டட தொழில்கள், அழகு நிலையம் என எங்கு பார்த்தாலும் வடமாநில தொழிலாளர்களே பணியமர்த்தப்படுவதாக இளைஞர்களிடையே கருத்து நிலவி வருகிறது.

விக்கிரமராஜா பேட்டி
இதனால் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை இல்லையா என்று குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விக்கிரமராஜா கூறுகையில், தமிழ்நாட்டில் வேலை இல்லை என்று தன்னை ஏமாற்றிக் கொள்ளாமல் வேலை வாய்ப்புகளை தேட இளைஞர்கள் முன்வர வேண்டும். வேலை தருவதற்கு வணிகர்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ரூ.18 ஆயிரம் கோடி
இங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி மாதம் ரூ.18 ஆயிரம் கோடி வருவாயை வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதனால் தான் வடமாநிலங்களில் வணிகம் அதிகரிக்கிறது. இங்கு வணிகள் பின் தங்கியுள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications