இதான் சம்மரா? தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. இன்றும் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்!
சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அசானி புயல் ஆந்திர பிரதேசத்தை தாக்கியது. ஆந்திரபிரதேச கடலோரம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அசானி" புயல் இரண்டு நாட்களுக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.
இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
வர்லாம் வர்லாம் வா.. காலையில் வெயில்.. மாலையில் மழை.. இதுதான் இனி சென்னையின் டிரென்ட்..வெதர்மேன்

சென்னை
நேற்று சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது.

இன்று மழை
இன்று தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

காரணம் என்ன?
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. கடல் பகுதியில் லேசான காற்று வீசும். மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

நாளை நிலவரம்
நாளை, 16.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் நேற்றை விட குறைவான வேகத்திலேயே காற்று வீச கூடும்.