வானிலையில் நடந்த அதிசயம்.. முன்கூட்டியே வருகிறது தென்மேற்கு பருவமழை.. எப்படி தெரியுமா?
சென்னை: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரபிரதேச கடலோரம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அசானி" புயல் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.
படிப்படியாக இது மேலும் வலுவிழந்து உள்ளது.
பருவமழை இழப்பீடு! மத்திய அரசு கைவிரித்துவிட்டது! சட்டப்பேரவையில் அமைச்சர் உடைத்த உண்மை!

தென்மேற்கு பருவமழை
இந்த நிலையில் அசானி புயல், கரீம் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை மே 15ம் தேதியே தொடங்க உள்ளது. அந்தமான் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் மழை தொடங்கும்.

அசானி புயல்
இதனால் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் மாநிலங்களில் 1 வாரத்திற்கு முன்பாகவே மழை தொடங்கும் என்று கூறப்படுகிறது. கேரளாவில் இம்மாத கடைசி வாரத்திலேயே மழை தொடங்க போகிறது. இந்தியாவில் தென் மேற்கு பருவமழை பொதுவாக ஜூன் 1ல் தொடங்காமல் தள்ளிப்போக காரணம் உலக வெப்பமயமாதல்தான். ஆனால் அசானி புயல், கரீம் புயல் காரணமாக வெப்பநிலை குறைந்துள்ளது.

என்ன காரணம்
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இதனால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. இதுவே தற்போது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க காரணம் ஆகும். பொதுவாக பருவமழைக்கு இரண்டு - மூன்று நாட்களுக்கு முன் தாக்கும் புயல், பருவமழையை தாமதம் ஆக்கும். ஆனால் பருவமழைக்கு இரண்டு - மூன்று வாரங்களுக்கு முன் தாக்கும் புயல் பருவமழையை துரிதப்படுத்தும் என்பார்கள். அப்படிதான் இந்த முறை பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளது.

வானிலை அதிசயம்
கிட்டத்தட்ட வானிலை அதிசயம் போல இந்த நிகழ்வு நடந்துள்ளது. அந்தமானில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை மே 15ம் தேதியே தொடங்க உள்ளது. அங்கு 22ம் தேதிதான் பருவமழை தொடங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மற்றும் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மழை
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடும் வெயிலுக்கு இடையில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.