பணக்கார தென் சென்னை ரூ.3000 பொங்கல் பரிசு வாங்கலியா? ரொக்கம் வாங்காத 7.8 லட்சம் பேர்.. டாப் நகரங்கள்
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 3,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இது ரேஷன்தார்களுக்கு பலனளிப்பதாக அமைந்துள்ளது.. அது என்ன?
பொங்கல் பரிசுத் தொகுப்பாக 3,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி மற்றும் சேலை ஆகியவை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக வீடுகளுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.

கடந்த ஜனவரி 8ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் பட் ரோட்டில் உள்ள நியாயவிலைக் கடையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் டோக்கன் முறையில் பரிசுத் தொகுப்பு விநியோகம் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பரிசு பொங்கல் தொகுப்பு
எனினும்கூட, பலர் இன்னும் பொங்கல் பரிசை பெறாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பண்டிகை காலத்தில் அதிகம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதால், இந்தப் பணி முழுமை பெறாமல் உள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பொங்கல் பரிசைப் பெற்றிருந்தாலும், மீதமுள்ளவர்களுக்கு இன்னும் வழங்க வேண்டிய நிலை உள்ளது.
அவர்கள் சொந்த ஊரிலிருந்து திரும்பியதும், கண்டிப்பாக ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது..
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு ஓரிரு நாள்களில் வெளியிட உள்ளது. மேலும், இந்த மாதம் இறுதிவரை ரூ.3,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேறு வகையில் தரவும்
அரசின் கணக்கெடுப்பின்படி, நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரத்தில் மாநிலம் முழுவதும் 2 கோடியே 14 லட்சத்து 91,255 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தலா 3,000 ரூபாய் என்ற கணக்கில் மொத்தமாக 6,447 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்த கார்டுதாரர்களில் சுமார் 96 சதவீதம் ஆகும்.
அரசு தரவுகளின்படி, தர்மபுரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள கார்டுதாரர்களில் சுமார் 98 சதவீதம் பேர் பொங்கல் பரிசுகளை பெற்றுள்ளனர். இதற்கு மாறாக, மாநிலம் முழுவதும் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை இதுவரை 7 லட்சத்து 80,764 குடும்ப அட்டைதாரர்கள் வாங்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
பரிசுத் தொகுப்பு
பரிசுத் தொகுப்பை பெறாதவர்களுக்கு வேலை காரணமாக வெளியூர் சென்றது, உடல்நலக் குறைவு, குறிப்பிட்ட நாட்களில் வர முடியாதது போன்ற காரணங்கள் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், விநியோக காலத்தை நீட்டித்து, மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையை உணவு வழங்கல் துறை வட சென்னை மற்றும் தென் சென்னை என இரண்டு மாவட்டங்களாக பிரித்துள்ளது.
வசதியான சென்னை மக்கள்
வட சென்னையில் மொத்தம் 10.37 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், 9.93 லட்சம் பேர் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுள்ளனர். இது 96 சதவீதமாகும். தென் சென்னையில் 10.59 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், 9.99 லட்சம் பேர் பரிசுத் தொகுப்பை பெற்றுள்ளனர். இங்கு விநியோக சதவீதம் 94 ஆக உள்ளது.
வசதியானவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக கருதப்படும் தென் சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் மாநில அளவில் கடைசி இடத்தில் உள்ளது. தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் 95 சதவீதமாக பதிவாகியுள்ளது.
ரேஷன் கார்டுதார்கள்
மொத்தமாக, தமிழகத்தில் 2.22 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தப் பொங்கல் பரிசுத் திட்டத்தின் மூலம், பெரும்பாலான குடும்பங்கள் பயன்பெற்றுள்ள நிலையில், இன்னும் 7.81 லட்சம் குடும்பங்கள் பரிசுத் தொகுப்பை பெறாதது அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications