பழனி கோவில் பள்ளி, கல்லூரிகளில் சிற்றுண்டி திட்டம்.. அறநிலையத்துறையின் மெனு என்னென்ன தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தின் 2 பள்ளி, 4 கல்லூரிகளிலும் பயிலும் 4 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதற்கான மெனு என்னென்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பரில் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி, மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் தான் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிர்வாகங்களின் பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் 2 பள்ளிகள், ஒரு பாலிடெக்னிக், 3 கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

6 கல்வி நிறுவனங்கள் என்னென்ன?
அதன்படி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் துவக்க பள்ளி ஆகிய 6 கல்வி நிறுவனங்களில் பயிலும் 4 ஆயிரம் மாணவர்கள் காலை சிற்றுண்டி திட்டத்தில் பயன் பெற உள்ளனர்.

சிற்றுண்டிகள் என்னென்ன?
இந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காலை வேளையில் இட்லி, வெண்பொங்கல், ரவா கிச்சடி, ரவா உப்புமா உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்பட உள்ளது. விடுமுறை நாட்கள் நீங்கலாக ஆண்டுக்கு 270 நாட்களுக்கு மாணவ-மாணவிகளுக்கு சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் ஆண்டுக்கு ரூ.3.79 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் விரிவுப்படுத்தப்படும்
இந்த திட்டம் தற்போது பழனி தண்டாயுதபாணி கோவில் கல்வி நிறுவனங்களில் மட்டும் அமலாகி உள்ளது. விரைவில் இந்த திட்டம் தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கோவில்கள் சார்பில் மொத்தம் 27 பள்ளிகள், 10 கல்லூரிகள் என மொத்தம் 37 கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் பள்ளிகளில் 13,740 மாணவர்களும், கல்லூரிகளில் 13,379 மாணவர்கள் என மொத்தம் 27,119 மாணவர்கள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications