கையில் கடிதத்துடன் போன பிடிஆர்! கொஞ்சமும் எதிர்பார்க்காத ஸ்டாலின்! உள்ளே இருந்தது என்ன? பரபர பின்னணி
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை நடக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலினை திடீரென இன்று பி.டி.ஆர். சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் பரபரப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பிடிஆர் கையில் கடிதம் ஒன்றுடன் சென்றதாக கூறப்படுகிறது.
அமைச்சரவையில் இருந்து பி.டி.ஆர். நீக்கப்படுகிறார் என்கிற அளவுக்கு செய்திகள் றெக்கை கட்டிப்பறக்கின்றன.

தமிழ்நாடு அரசியலில் தற்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்த ஆடியோவில் உண்மைத்தன்மை அறியப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இன்னொரு ஆடியோவும் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரண்டு ஆடியோக்களின் உண்மைத்தன்மை தெரியவில்லை. அமைச்சர் பிடிஆர் இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது, பொய்யானது என்று குறிப்பிட்டு இருந்தார்.

பிடிஆர் ஆடியோ: பி.டி.ஆருக்கு எதிரான ஆடியோ விவகாரம் திமுக தலைமையை அசைத்து பார்த்திருந்தது. முதல் ஆடியோ வெளிவந்தபோதே, பி.டி.ஆரா இப்படி ? என தனக்கு ஆலோசகராக இருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் வருத்தப்பட்டிருந்தாராம் முதல்வர் ஸ்டாலின்.
இருப்பினும், ஆடியோ பொய்யாக இருக்குமோ என ஒருவித சந்தேகமும் இருந்தது. ஆடியோ ஜோடிக்கப்பட்டவை என பி.டி.ஆர்.மறுத்த நிலையில், 2வது ஆடியோ ரிலீஸானது. அதில் பி.டி.ஆர். பேசியதாக கூறப்படும் விஷயம் ஸ்டாலினை ரொம்பவுமே அப் செட்டாக்கியிருந்தது. தனது நம்பிக்கைக்குரிய நபர் ஒருவர் மூலம் ஆடியோ குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விசாரித்து இருக்கிறார்.
இதற்கிடையே, ஜி ஸ்கொயர் ரெய்டு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்த, டெண்சனான ஸ்டாலின், தனது ஆலோசகர்களிடம் அதை பற்றி பேசி ஆலோசனை செய்துள்ளார்.
கட்சிக்கு உள்ளேயே பிடிஆர் மீது நட்பு இல்லாத சில சீனியர் அமைச்சர்கள் பி.டி.ஆர். ஆடியோ விவகாரத்தை கண்டு மிகவும் ரசித்தனர் என்ற தகவலும் முதல்வருக்கு சென்றுள்ளது.
இதனையறிந்த ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் கே.என்.நேரு, டி.ஆர்.பாலு ஆகியோருடன் விவாதித்திருக்கிறார். அப்போது, "பி.டி.ஆர். இன்னும் கார்ப்பரேட் கம்பெனி மாதிரியே தனது அமைச்சர் பதவியை பயன்படுத்துகிறார். திமுகவின் அரசியல் தியாகம் எதுவும் தெரிவதில்லை. பிடிஆருக்கு பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் ஆட்சிக்கும் உங்கள் தலைமைக்கும் கெட்டபெயரை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறது.
அதனால் அமைச்சரவையில் இருந்து அவரை நீக்கலாம். இந்த கசப்பான முடிவை எடுக்கவில்லையெனில், அமைச்சர்கள் மட்டுமல்ல கட்சிக்காரர்கள் பலரும் தங்களுக்கு தோண்றியதையெல்லாம் பேசுவார்கள். அவர்களே அந்த ஆடியோவை ரிலீஸ் செய்வார்கள். அப்படி ரிலீஸ் ஆனால், ஆட்சிக்கும் கட்சிக்கும் மேலும் கெட்டப்பெயர் தான் வந்து சேரும்.
தவறு செய்பவர்களை நீங்கள் தண்டித்தால் தான் மற்றவர்களுக்கும் பயம் வரும். உங்களை மதிப்பார்கள் " என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். இதனை ஸ்டாலின் ஆமோதிக்கவும் செய்திருக்கிறார்.
இந்த நிலையில், தலைமை தனக்கு பெரிதாக சப்போர்ட்டாக இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார் பிடிஆர். இதன் காரணமாகவே அவர் மனமுடைந்து முருகன் கோவிலில் வடபழனியில் சென்று வழிபாடும் நடத்தி இருக்கிறார்.

ஸ்டாலின் - பிடிஆர் சந்திப்பு: இந்த நிலையில்தான், ஸ்டாலினை சந்தித்த பி.டி.ஆர். தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தயாராக எடுத்துச் சென்ற கடிதத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது, ஸ்டாலினாக, ராஜினாமா செய்யுங்கள் என சொல்வதற்கு முன்பு, நாமளே ராஜினாமா செய்திடலாம் என்ற முடிவை எடுத்து ராஜினாமா கடிதத்தை எடுத்துச் சென்றுள்ளார் பி.டி.ஆர். அதனை ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை.
கடிதத்தை படித்து பார்த்துவிட்டு, அதனை மீண்டும் பி.டி.ஆரிடமே கொடுத்து விட்டார் ஸ்டாலின். இவர்கள் இருவரின் சந்திப்பில், ஆடியோ விவகாரம் பற்றி பேசி இருக்கிறார். டெல்லியிலிருக்கும் ஒரு பெண் பத்திரிகையாளர் குறித்தும், அவரிடம் பேசிய சில விஷயங்கள் குறித்தும் பிடிஆர் பேசி இருக்கிறார்.
இந்த ஆடியோ விவகாரம் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து மீள்வதற்காகத்தான் இந்த ராஜினாமா கடிதம். என்னால் உங்களுக்கும் ஆட்சிக்கும் கெட்டப்பெயர் உருவாவதை ஏற்கமாட்டேன். ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு எனக்கு தண்டனை கொடுங்கள், என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
பி.டி.ஆர். தனது தவறை உணர்ந்து பேசியதில் ஸ்டாலினின் மனம் சடாரென்று இறங்கியுள்ளது. அதனால் ராஜினாம கடிதத்தை திரும்பி தந்ததுடன், நீங்கள் போய் வாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனாலும், ராஜினாமா கடிதத்தை ஸ்டாலினின் மேஜையிலேயே வைத்துவிட்டு, "இப்போது இல்லையென்றாலும் எப்போதாவது பயன்படும் " என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் பி.டி.ஆர். !
இந்த நிலையில், பி.டி.ஆரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு அவரை அமைச்சரவையிலிருந்து விடிவியுங்கள் என சீனியர் அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால், அவரது ராஜினாமாவை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்திலேயே இருக்கிறார் முதல்வர்.












Click it and Unblock the Notifications