யார் சொல்வது தேர்தல் ஆணையத்தில் செல்லும்? - திருநாவுக்கரசருக்கு நடந்ததுதான் ஓபிஎஸ்ஸுக்கு நடக்குமா?
சென்னை : அதிமுகவில் 1991ல் ஜெயலலிதாவுக்கும் திருநாவுக்கரசருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுத்ததோ அதே போன்ற முடிவுதான் இப்போதும் வரும் எனக் கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அதிமுகவில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்பதுதான் அதிமுக தொண்டர்களுக்கு முன்பு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பினர் மாறி மாறி கட்சியை விட்டு நீக்கி வரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும்பான்மையான ஆதரவை தன் வசம் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

கட்சியில் இருந்து நீக்கம்
அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த 5 மாவட்ட செயலாளர்கள், ஓபிஎஸ்ஸின் மகன்கள் உள்ளிட்ட 18 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நேற்று நீக்கப்பட்டனர்.

22 பேரை நீக்கிய ஓபிஎஸ்
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் பதிலடியாக அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, உள்ளிட்ட 22 பேர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்

பிளவு
அதிமுக ஓபிஎஸ் அணி - ஈபிஎஸ் அணி என பிளவுபட்ட நிலையில், இரு தரப்பும் மாறி மாறி கட்சியில் இருந்து நீக்குவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கடந்த 2017ஆம் ஆண்டு கூட சசிகலா - ஓபிஎஸ் தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கூட, இருவரும் ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கிக்கொண்டனர். ஆனால், யாரின் உத்தரவு தேர்தல் ஆணையத்தில் செல்லும் என்பதுதான் முக்கியமான கேள்வி. அதுதான் தொண்டர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

யார் சொல்வது செல்லும்?
தற்போதைய நிலையில் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே செல்லும் என்று ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. அதேநேரம், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டி, தான் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். கட்சி விதிகளின்படியே எல்லாம் நடக்கிறது எனக் கூறி வருகிறது ஈபிஎஸ் தரப்பு. ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமாக இருப்பது கண்கூடு.

தேர்தல் ஆணையம் யார் பக்கம்
இதையடுத்து, மீண்டும் தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவெடுத்துள்ளார் ஓபிஎஸ். ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு தொடர்பாகவே இரு தரப்பினரும் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு கடிதங்களை எழுதியுள்ளனர். ஆனால், இதுவரை தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் தேர்தல் ஆணையத்தின் கதவுகளை இருதரப்பும் தீவிரமாக தட்டி வருகிறது. இதில் தேர்தல் ஆணையம் யார் பக்கம் நிற்கும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

திருநாவுக்கரசர் - ஜெயலலிதா மோதல்
1991ல் ஜெயலலிதாவுக்கும் திருநாவுக்கரசருக்கும் கருத்து வேறுபாடு வந்தபோது 26 எம்.எல்.ஏ-க்களில் 8 எம்.எல்.ஏக்கள் திருநாவுக்கரசர் பக்கம் இருந்தனர். 18 பேர் ஜெயலலிதா ஆதரவாளர்களாக இருந்தனர். 14 எம்.பி-க்களில் 7 எம்.பிக்கள் திருநாவுக்கரசர் பக்கமும், 7 எம்.பிக்கள் ஜெயலலிதா பக்கமும் இருந்தனர். திருநாவுக்கரசர் தரப்பு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றபோது மிகப்பெரும் ரத்தக்களறி ஏற்பட்டது. சட்டமன்றத்தில் அ.தி.மு.க ஜெயலலிதா அணி, அ.தி.மு.க திருநாவுக்கரசர் அணி என்றே சபநாயகர் இரு தரப்புக்கும் வாய்ப்பளித்தார். பின்னர் இருவரும் தேர்தல் ஆணையத்தை அணுகினர்.

ஜெயலலிதாவுக்கு சாதகம்
பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயலலிதா பக்கம் இருந்ததால் இரட்டை இலை சின்னம் ஜெயலலிதாவுக்கே கிடைத்தது. அதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் ஜெயலலிதா. பின்னர் அண்ணா புரட்சித்தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். 1996ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கியில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார்.

கட்சி மாறிய திருநாவுக்கரசர்
இதையடுத்து மீண்டும் அதிமுகவில் ஜெயலலிதாவால் சேர்க்கப்பட்ட திருநாவுக்கரசர் மீண்டும் நீக்கப்பட்டார். பின்னர் எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி கடந்த 2004ஆம் ஆண்டு அந்த கட்சியை பாஜகவுடன் இணைத்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலத் தலைவர் ஆனார். தற்போது காங்கிரஸ் சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதி எம்.பியாக உள்ளார்.
Recommended Video

அதே நிலை?
தேர்தல் ஆணையத்தில் இப்போதும் அதே போன்றதொரு சூழலே ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடமே அதிகமான எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் அவருக்கே கட்சியின் அதிகாரமும், இரட்டை இலை சின்னமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால் திருநாவுக்கரசர் போல ஓபிஎஸ்ஸும் தனிக்கட்சி தொடங்கும் முடிவை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications