"Chatgpt.." கூகுள் இனி காலி? சுட சுட ரிசல்ட்.. 2024 லோக்சபா தேர்தலில் யார் ஜெயிப்பாங்களாம் தெரியுமா?
இணையதள உலகத்தில் பெரும் புயலை உருவாக்கியுள்ள சாட்ஜிபிடி என்றால் என்ன, கூகுளை இது காலி செய்துவிடுமா என்ற கேள்வி இப்போது பெரும்பாலானோர் மனதில் எழுந்துள்ளது.
சென்னை: இணையதள உலகம் இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் AI ஆதிக்கம், இணைய வட்டாரத்தில் வேகமாக ஆக்கிரமித்து வருகிறது. புகைப்படங்களை உருவாக்குவது முதல் கட்டுரைகளை தயாரிப்பது வரை அனைத்தையும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் மூலமாக செய்து விட முடியும்.
இதில் புது வரவு தான் சாட்ஜிபிடி. இதை "கூகுள் கில்லர்" என்றும் செல்லமாக அழைக்கிறார்கள். கூகுளை தேடி செல்வோருக்கு மாற்றாக இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் செயலி மாறப்போகிறது என்பது தான் இதற்கு காரணம்.
Facebook மற்றும் Instagram ஆகியவை சமூக ஊடக உலகில் மிக முக்கியமான இரண்டு ஆப்கள். பேஸ்புக் 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் 1 மில்லியன் யூசர்களை பேஸ்புக் பெறுவதற்கு, 10 மாதங்கள் தேவைப்பட்டது. Instagram 2010ம் ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் iOS போன்களில் அதாவது ஆப்பிள் போன்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு மில்லியன் பேர் இதை டவுன்லோடு செய்ய இரண்டு மாதங்கள் வரை பிடித்தது. ஆனால் அதற்குள் இன்ஸ்டா பற்றி உலகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்பு நிலவ ஆரம்பித்தது. எனவே 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு போன்களிலும் கிடைக்க ஆரம்பித்ததுமே, 24 மணி நேரத்தில் 1 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துவிட்டனர். இந்த சாதனையை இதுவரை எந்த செயலியும் முறியடிக்கவில்லை. ஆனால் ChatGPT குறித்து முன்கூட்டியே பெரும்பாலானோருக்கு தெரியாது. அப்படி இருந்தும், அறிமுகமான 5 நாட்களில் 1 மில்லியன் பேர் இதை டவுன்லோடு செய்துள்ளனர். நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் ட்விட்டரில் இதை உறுதி செய்துள்ளார். அப்படியானால் சாட்ஜிபிடி மீதான மக்களின் க்ரேஸ் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும்.

சாட்ஜிபிடிக்கு வரவேற்பு
இசைபிரியர்களுக்கு விருப்பமான Spotify ஆப், ஐந்து மாதங்களில் ஒரு மில்லியன் பயனர்களை எட்டிப்பிடித்தது. ஸ்பாட்டிபை ஆப், 2008, அக்டோபரில் வெளியானது. இப்போது உலகளவில் 182 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது ஸ்பாட்டிஃபை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், வீடியோ தளமான நெட்ஃபிக்ஸ் 3.5 ஆண்டுகளில் ஒரு மில்லியன் பயனர்களை எட்டிப்பிடித்தது. இப்படிப்பட்ட இணையதள ஜாம்பவான்களின் இந்த சாதனைகளை ஊதித்தள்ளியுள்ளது சாட் ஜிபிடி.

கலக்கும் நுண்ணறிவு
நீங்கள் எந்த கேள்வி கேட்டாலும் செயற்கை நுண்ணறிவு மூலமாக பதில் சொல்கிறது சாட்ஜிபிடி. ஆசிரியர் சொல்லும் கட்டுரை தலைப்பை இதனிடம் சொன்னால், இணையதள வசதி இல்லாமலேயே இந்த சேவையை பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். ஏனெனில் கூகுள், பிங்க் போன்ற தேடுபொறிகள் நீங்கள் ஒரு வினாவை அனுப்பியதும் பல்வேறு வெப்சைட்டுகளில் இருந்து தகவல்களை உங்களுக்கு பெற்று தரும். எனவே இன்டர்நெட் அவசிய தேவையாக இருக்கிறது. சாட்ஜிபிடியை பொறுத்தளவில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நுண்ணறிவு அடிப்படையில் விடைகளை தருகிறது. இது ஒரு முக்கியமான வித்தியாசமாகும். இதில் ஒரு பின்னடைவு என்னவென்றால், லேட்டஸ்ட் தகவல்கள் கிடைக்காது. அதை அப்டேட் செய்வதற்கு தேவை இருக்கிறது. மேலும், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு இன்னும் சாட்ஜிபிடி அப்டேட் ஆகவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?
இப்போது உள்ள தரவுகளின் அடிப்படையில் நாம் விரும்பும் கேள்விகளை கேட்டு பதிலை பெறலாம். அப்படித்தான் நாமும் ஒரு சில கேள்விகளை கேட்டோம். உதாரணத்துக்கு 2024 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வியை முன் வைத்தோம். அதற்கு சாட்ஜிபிடி சொன்ன பதில் இதுதான்: 2024 ஆம் ஆண்டு யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாது. ஏனென்றால் அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதை தீர்மானிக்கும். தற்போது ஆட்சி செய்யும் அரசின் செயல்பாடு, அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள், தேர்தல் நேரத்தில் நிலவும் பொதுமக்களின் மன ஓட்டம் போன்ற விஷயங்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். இப்போது முதல், 2024ம் ஆண்டுக்குள் பல விஷயங்கள் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணிப்பது என்பது இயலாத காரியம் என்று பதில் சொன்னது சாட்ஜிபிடி.

ராகுல் காந்தி அரசியல் எதிர்காலம்
ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்டபோது, "என்னை மன்னிக்கவும், ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலத்தை என்னால் கணிக்க முடியவில்லை. எனது பயிற்சி தரவுகள் 2021 ஆம் ஆண்டு வரை தான் போகிறது. எனவே எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. மேலும் தனி நபர்களின் அரசியல் வாழ்க்கை என்பது வருங்காலத்தில் எந்த மாதிரி மாற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை பொறுத்து இருப்பதால் அதை கணிப்பது கஷ்டம் என்று தெரிவித்தது. ம்ம்.. புரியுது. "எப்போ எனக்கு கல்யாணம் ஆகும்னு எதுக்கும் இந்த ஏஐ சோதிடரிடம் ஒருவார்த்தை கேட்டு பார்க்கலாமா.." என்ற 90ஸ் கிட்சின் மைண்ட் வாய்ஸ், சத்தமாகவே கேட்கிறது.












Click it and Unblock the Notifications