நாள் குறிச்சாச்சு.. அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்? ஸ்டாலின் போடும் 2 மனக்கணக்கு.. ஆனால்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றியமைப்பதில் இருவேறு கருத்துக்களை ஸ்டாலின் கொண்டிருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று ஒன்றரை வருடங்கள் ஆக போகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பேச்சுக்கள் எழுந்தன. அதை தொடர்ந்து உதயநிதிக்கு சில குறிப்பிட்ட துறைகள் வழங்கப்படலாம் என்று பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் இதில் எந்த விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த பேச்சுக்கள் எழுந்துள்ளன.

ஆலோசனை
இது குறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்த போது, ''மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனக்குறையை போக்கும் வகையில் இலாகாவை மாற்றித்தரலாம் என்பது ஸ்டாலின் முடிவு. ஐ. பெரியசாமி கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கிறார். அவர் தொடக்கத்தில் இருந்தே இந்த அமைச்சரவை மீது விருப்பம் இன்று இருந்துள்ளார். நான்தான் சீனியர் அமைச்சர். அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றதும் நான்தான். அதனால் எனக்கு அமைச்சரவையை மாற்றி கொடுங்கள் என்று அவர் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்து வருகிறாராம். இதையடுத்து முதல்வரும் அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்து இருக்கிறார்.

யோசனை
இதன் காரணமாகவே அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சில நாட்களாக யோசித்து வருகிறார். இலாகாவை மாற்றியமைக்க விரும்புவதால் அதன் தொடர்ச்சியாக உதயநிதியை அமைச்சராக்கி விடுங்கள் என ஸ்டாலினிடம் மூத்த அமைச்சர்கள் சிலரும், நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகிறார்களாம். அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி பல அமைச்சர்கள் இதில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து இருந்தனர். இதனையடுத்தே, 14-ந்தேதி உதயநிதி அமைச்சராகிறார் என செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து இன்றைய தினம் வரை (09/12/22) ராஜ்பவனுக்கு (கவர்னர் மாளிகை) அரசு தரப்பிலிருந்து தகவல் போகவில்லை.

மூத்த அமைச்சர்
ஒருவேளை பதவியேற்கும் 14-ந்தேதிக்கு முதல் நாள் முறைப்படி அரசு தரப்பிலிருந்து தகவல் சொல்லப்படலாம். ஆனால், இப்போது வரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக செல்லவில்லை. இது ஒரு புறமிருக்க, அரசு நிர்வாகம் குறித்த புரிதல் இன்னும் உதயநிதிக்கு வரவில்லை. அவர் எம்எல்ஏவாக சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் அமைச்சராக இன்னும் கொஞ்சம் நேரம் கொடுக்கலாம். அதனால் இன்னும் கொஞ்சநாள் போகட்டுமே என்று ஸ்டாலினின் அட்வைஸர்கள் சிலர் ஸ்டாலினிடம் சொல்லி வருகிறார்களாம்.

உதயநிதி
கட்சியின் சீனியர்கள் இருவர், 'தம்பியை (உதயநிதி) அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டால் அவரை சுற்றித்தான் அரசியல் நடக்கும். அதாவது, அவரது துறையிலுள்ள பிரச்சனைகளையும் தவறுகளையும் தான் ஊடகங்கள் தினம் தினம் பெரிதுபடுத்தும். தொடர்ச்சியாக இது நடக்கும். அவரை வைத்து கட்சியை விமர்சனம் செய்ய பார்ப்பார்கள். அப்படி நடந்தால் அது உதயநிதியின் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உதயநிதிக்கு எதிராக பதிவாகும் செய்திகள், உங்கள் நிர்வாகத்துக்கு எதிராகவும் பேசப்படும். அதனால் நாடாளுமன்ற தேர்தல் வரை விட்டுப் பிடிக்கலாமே. நாடாளுமன்ற தேர்தல் முடியட்டும்.

கருத்து
அதன்பின் முடிவு எடுக்கலாம்' என்று ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள். அதனால், ஸ்டாலினிடம் ஒரு வித ஊசலாட்டம் இருக்கிறது. அவரை அமைச்சராக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பம் அவரிடம் இருக்கிறதாம். 10-12 தேதிகளில் இதற்காக ஸ்டாலின் இறுதி முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. முன்னதாக இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன். நான் அமைச்சராக போவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஒன்றரை வருடமாகவே இந்த பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் முதல்வர்தான் அதை பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.