விடாமல் துண்டு போடும் ஓபிஎஸ்.. ‘1 மணி நேரம் ஆலோசனை'.. அடுத்த மீட்டிங் யாரோடு? - அவரே சொன்ன பதில்!
சென்னை : எடப்பாடி பழனிசாமி, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தத் தயாராகி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதுதான் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில் தான் நேற்று, அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமனம் செய்து அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ்ஸின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியை விட்டே நீக்குவதாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
அதனை ஓபிஎஸ் தரப்பு பொருட்படுத்தவில்லை. ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர் என்றும் அவர் நியமனமே செல்லும் என்றும் கூறி வருகிறது ஓபிஎஸ் தரப்பு.
இந்நிலையில், இன்று பண்ருட்டி ராமச்சந்திரனை சென்று சந்தித்து வாழ்த்துக் கூறி, அவருக்கு சால்வை அணிவித்த ஓ.பன்னீர்செல்வம் அவருடன் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் தனது அடுத்தகட்ட திட்டம் பற்றி தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

கைவிட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு அணிகளாகப் பிரிந்த நிலையில், கட்சியிலிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி எடப்பாடி பழனிசாமியும், ஈபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி ஓ.பன்னீர்செல்வமும் மாற்றி மாற்றி அறிக்கை வெளியிட்டு வந்தனர். இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வந்த பொதுக்குழு வழக்கு தீர்ப்பால், அந்த நடவடிக்கைகளை இரு தரப்பினருமே சில காலம் கைவிட்டிருந்தனர். எனினும், எதிர் தரப்பினர் அதிமுகவிலேயே இல்லை என்றுதான் இப்போதும் இரு தரப்பினருமே கூறி வருகின்றனர்.

பண்ருட்டியாரை சந்தித்த ஓபிஎஸ்
இந்நிலையில், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக கருதப்படும் பண்ருட்டி ராமச்சந்திரனை சமீபத்தில் சென்று சந்தித்துப் பேசினார் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் அதிமுக விவகாரம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். பண்ருட்டி ராமச்சந்திரன், கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் அமைச்சரவையில் பதவி வகித்தவர். பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளில் எம்.எல்.ஏவாக இருந்தவர். ஏற்கனவே ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் அவரைச் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், மீண்டும் ஓபிஎஸ் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

ஈபிஎஸ் - பண்ருட்டி மோதல்
அதன் பிறகு பண்ருட்டி ராமச்சந்திரன், "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவைக் காப்பாற்ற முடியாது. அவரின் தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள். ஈபிஎஸ் தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவைத் தடுக்க முடியாது" என்று கடுமையாகச் சாடியிருந்தார்.

அட்டாக் செய்த ஈபிஎஸ்
தற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி," சிலரது தூண்டுதலின்பேரில் பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சிக்கிறார். பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்தபோதே ஜெயலலிதாவை விமர்சித்தவர். அங்கிருந்து பாமகவுக்கு போனார், பாமகவை மறந்துவிட்டு தேமுதிகவுக்கு போனார். அந்தக் கட்சியை மழுங்கடித்து விட்டார். தற்போது நமக்கு அறிவுரை சொல்கிறார். உங்கள் அறிவுரை எதுவும் வேண்டாம். ஒரு கிளை கழகச் செயலாளருக்கு இருக்கும் தகுதிகூட அவருக்கு இல்லை" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

அரசியல் ஆலோசகர்
இந்தநிலையில், நேற்று ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை நியமிப்பதாக அறிவித்தார். இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே, அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் அமைப்பு செயலாளரான பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்று அறிவித்தார்.

ஆலோசனை
இந்தச் சூழலில் சென்னை அசோக் நகரில் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் இன்று சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் பயணித்த மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனின் அனுபவங்களை ஆலோசனைகளாக பெற்றோம் எனக் கூறினார். அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அதனை எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

சந்திப்பு தொடரும்
பண்ருட்டியார் உடனான சந்திப்பு எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என ஈபிஎஸ் தரப்பு விமர்சிப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், "எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக கட்சியை ஆரம்பித்தாரோ, ஜெயலலிதா மாபெரும் இயக்கமாக வளர்த்தாரோ அந்த நோக்கம் மற்றும் கொள்கைகளை பற்றி பண்ருட்டி ராமச்சந்திரன் தமிழக மக்களிடம் சொல்லும்போது அது தனித்துவம் பெறுகின்ற ஒரு வாய்ப்பு இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. கடந்த காலங்களில் எம்ஜிஆருடன் இருந்தவர்கள் மற்றும் ஜெயலலிதாவுடன் பயணித்தவர்களைச் சந்தித்து அவர்களின் ஆசியைப் பெறுவோம்." எனத் தெரிவித்தார்.

அடுத்தகட்ட திட்டம்
எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் பயணித்தவர்களைச் சந்திக்கப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பதன் மூலம், கட்சியின் மூத்த தலைவர்கள், சசிகலா உள்ளிட்டோரை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்ட மூத்த முன்னாள் நிர்வாகிகளையும் ஓபிஎஸ் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications