தமிழக அரசியல் "அஜெண்டாவை செட்" செய்யும் பாஜக.. தலைகீழாக மாறிய கருணாநிதி காலத்து திமுக!
சென்னை: அஜென்டாவை பாஜக செட் செய்ய, தமிழக அரசியல் அதை சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ இருந்தபோது அவர்கள் நிர்ணயிப்பதுதான் அரசியலாக இருந்த நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சமீப காலத்தில் நடைபெறும் பல சம்பவங்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இதில் லேட்டஸ்ட்தான் பல்லக்கு விவகாரம் மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா குறித்த சர்ச்சைகள்.
நன்கு கவனித்து பாருங்கள்.. நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தன் பின்னணியில், "ஆளுநருக்கு அமைச்சரவையை எதிர்க்கும் அதிகாரம் இல்லை.." என்ற பேரறிவாளன் வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றம் கொடுத்த, குட்டு இருந்தது என்ற பேச்சு எழுந்தபோதும், அது விவாதப் பொருளாகாமல், தருமபுர ஆதீனத்தின் பட்டன பிரவேச நிகழ்ச்சியும், பல்லக்கில் சுமப்பது சரியா தவறா என்ற வாத விவாதங்களும் வெடித்து கிளம்பி விட்டன.

ஆளுநர் பேச்சு
இதற்கு காரணம், பாஜக தலைவர்களின் பேட்டிகள்தான். அவர்கள் பட்டன பிரவேசம் குறித்து கருத்து கூற ஆரம்பிக்க, அதற்கு திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பதிலளிக்க என.. விஷயம் வேறு எங்கெங்கோ போய் விட்டது. இன்னும் அது சார்ந்த விவாதங்கள் தொடருகின்றன. இதே மாதிரிதான், இன்றைய டாபிக்கை ஆளுநர் எடுத்துக் கொண்டுள்ளார். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஆபத்தானது என கூற.. அதற்கு அந்த அமைப்பும் மேலும் பல அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். உச்சகட்டமாக.. ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாகவும் பிஎப்ஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

பாஜக தலைவர்களை சுற்றி களம்
தமிழகம் மட்டுமல்ல.. தேசிய அளவிலும் அவ்வப்போது பாஜக தலைவர்கள்தான் செய்திகளுக்கான டிரெண்ட் செட்டர்களாக மாறுகிறார்கள். ஹிந்தியை உயர்த்தி பிடித்து யாரோ ஒரு பாஜக தலைவர் பேசினால், அது தமிழகம் தொடங்கி கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் பேசு பொருளாகிறது. ஆக மொத்தம், தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்களோ, அல்லது தமிழக அரசு எங்கே தவறுகிறதோ அவையெல்லாம் பேசு பொருளாகாமல் பாஜக தலைவர்கள் எதைப் பேசுகிறார்களோ, அதைச் சுற்றியே நகர்கிறது தமிழக அரசியல் களம்.

களத்தை கட்டுப்படுத்திய கருணாநிதி
கருணாநிதி தீவிர அரசியலில் இருந்த காலகட்டங்கள் வேறாக இருந்தன. "ஓய்வறியா சூரியன், முத்தமிழறிஞர்" என்றெல்லாம் திமுக தொண்டர்கள் அவரை அழைத்து மகிழ்ந்தாலும், அதைத்தாண்டி.., எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் தமிழக அரசியல் போக்கை தீர்மானிக்க கூடியவராக கருணாநிதி இருந்தார். அவர் என்ன அறிக்கை வெளியிடுகிறாரோ அதை சுற்றி களம் அமையும். ஜெயலலிதா அதற்கு பதில் அறிக்கை வெளியிடுவார். அதற்கு பதிலுக்கு பதில் அறிக்கையை கருணாநிதி வெளியிடுவார்.

ஆக்கப்பூர்வ விஷயங்கள்
அறிக்கையோ பேட்டியோ.. கருணாநிதி அல்லது ஜெயலலிதா கூறிய விஷயங்களைச் சுற்றிதான் அரசியல் நகர்வுகள் இருக்கும். ஓகே.. பாஜக தலைவர்கள் கூறுவதை வைத்து அரசியல் நகர்ந்தால் என்ன கெட்டுப்போகப் போகிறது என்பதுதான் அடுத்த கேள்வியாக வரும். ஆனால், விஷயம் அதில்தான் இருக்கிறது. கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ, அவர்கள் செட் செய்யும் அஜென்டாக்கள், வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும். மின் வெட்டு பற்றியோ, நதிநீர் பங்கீடு பிரச்சினை பற்றியோ, மாநில கடன் குறித்தோ காரசார வாத விவாதங்களுக்கு அவர்கள் பேட்டிகளும், அறிக்கைகளும் வித்திடும். ஆனால், சமீப காலமாக அப்படியான ஆக்கப்பூர்வ விவாதங்களை பார்க்க முடிகிறதா? இவ்வளவுதான் வேறுபாடு. நாம் வளர்ச்சி சார்ந்த அரசியலை கையில் எடுக்கப்போகிறோமா, மதமோ அல்லது தனி நபர் தாக்குதல்களையோ கையில் எடுத்து அரசியலை முன் நகர்த்தப்போகிறோமா என்பதை சம்மந்தப்பட்ட தலைவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதுவரை.. இப்படியான செய்திகள் பிரேக்கிங் செய்திகளாக இடம் பிடிக்கத்தான் செய்யும்.












Click it and Unblock the Notifications