ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்ற ஈபிஎஸ்ஸின் வலது கரம்.. எடப்பாடி எப்போ? ‘நடக்குமா? ‘அந்த சிக்கல்’ இருக்கே!
சென்னை : முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஏற்று அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்களும் தங்களது தொகுதிக்கான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுவரை கோரிக்கை மனுவை அளிக்கவில்லை.
சட்டமன்ற தொகுத்திக்குட்பட்ட முதல் 10 கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கடிதம் எழுதினார்.
இதையடுத்து திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள், தங்கள் தொகுதியின் நீண்டகால கோரிக்கைகளில் முதன்மையானவற்றை பட்டியலிட்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அத்தனை அதிமுக எம்.எல்.ஏக்களுடனும் சென்று கோரிக்கை மனுக்களை நேற்று ஆட்சியரிடம் வழங்கினார்.

ஸ்டாலின் எழுதிய கடிதம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சமீபத்தில் ஒரு கடிதம் எழுதினார். தங்கள் தொகுதிகளில் தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். எம்.எல்.ஏக்கள் அளிக்கும் பட்டியலில் இருக்கும் மிக முக்கியமான திட்டங்களை அடையாளம் கண்டு, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கும்
பாரபட்சமில்லாமல், எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏக்களுக்கும் இந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலினின் கடிதத்தை ஏற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், அதிமுக, பாஜக என அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களுமே தங்கள் தொகுதிகளுக்கான 10 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து வருகின்றனர்.

வேலுமணி கொடுத்த கோரிக்கை மனு
எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி அருண்குமார், அம்மன் அர்ஜுனன், அமுல் கந்தசாமி, வி.பி.கந்தசாமி, தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேற்று தங்கள் தொகுதிகளுக்கான 10 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அளித்தனர்.

10 கோரிக்கைகள்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, தொகுதியில் இருக்கும் 10 பிரச்சனைகள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். அதில் குறிப்பாக சாலைகள் மோசமாக இருப்பதால் பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலை இருப்பது குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்ட 500 சாலை அமைக்கும் திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளதாகவும் அந்த சாலைகள் மீண்டும் போடப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி எப்போது?
எஸ்.பி.வேலுமணி மட்டுமல்ல, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்ட பலரும் தங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் தங்களது தொகுதிகளின் கோரிக்கை பட்டியலை அளித்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏவான எடப்பாடி பழனிசாமி இன்னும் தனது தொகுதி சார்ந்த 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கவில்லை.

15 நாட்கள் ஆச்சே
10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வையுங்கள் என முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதன்படி பார்த்தால், தற்போது 15 நாட்களைக் கடந்துவிட்டது. எனவே, எடப்பாடி பழனிசாமி, தனது தொகுதிக்கான கோரிக்கைகளை முன்வைக்க மாட்டாரா எனும் கேள்வி எழுந்துள்ளது.

என்ன காரணம்?
எடப்பாடி பழனிசாமி தனது தொகுதி சார்ந்த 10 கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்றால், சாலை, குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்த வேண்டி வரும். நான்கரை ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தவரின் தொகுதியிலேயே இப்படி குறைகள் இருப்பதை திமுகவினர் விமர்சிக்கக்கூடும். அதனால் தான் அவர் மட்டும் மனுவை சமர்ப்பிக்காமல் தவிர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications