அதிவேக கார்.. ராங்வேயில் இருசக்கர வாகனங்கள் – பொள்ளாச்சியை பதறவைத்த விபத்தில் 2பேர் பலி
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று காலை காருடன், இருசக்கர வாகனங்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற காரில், அடுத்தடுத்து நான்கு இரண்டு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கோவை - பொள்ளாச்சியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட அந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. அப்படித்தான் இன்று அதிகாலை மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 29).

இவர் தன் பெரியம்மாவை வழியனுப்பி வைப்பதற்காக கோவை விமான நிலையம் சென்றிருக்கிறார். அதன் பிறகு அவர் உடுமலைப்பேட்டை. செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார். அவரின் கார் தாமரைக்குளம் அருகே சென்றபோது, ஒரு இரண்டு சக்கர வாகனம் எதிரில் வந்துள்ளது.
இரண்டு வாகனங்களும் அதிவேகமாக சென்றதால், எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பொள்ளாச்சி பட்டணம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பழனிச்சாமியின் இரண்டு சக்கர வாகனம் போலவே, அடுத்தடுத்து மூன்று இரண்டு சக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கின.
இந்த கோர விபத்தில் சிக்கி ஐந்து பேர் காயமடைந்தார்கள். அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோவை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். இதில் கோவையைச் சேர்ந்த குமார் (வயது 55) என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக கிணத்துக்கடவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் அந்த இடத்தில் சிறிது நேரத்துக்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன.
இந்த விபத்து தொடர்பாக கிணத்துக்கடவு காவல்துறை கூறுகையில், “பாலாஜியின் கார் அதிவேகமாக சென்றுள்ளது. நான்கு இரண்டு சக்கர வாகனங்களும் ராங் வே சென்றுள்ளனர். காரால் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் விபத்து ஏற்பட்டுள்ளது. பாலாஜி சென்ற காரில் ஏர்பேக் இருந்தது. அதனால் அவர் லேசான காயங்களுடன் தப்பித்துவிட்டார். அதேநேரத்தில் பழனிச்சாமி மற்றும் குமார் ஆகியோரின் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டனர்.
விபத்தில் காயமடைந்த மசநாயக்கன்புதூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார், தாமரைக்குளத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, பட்டணம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் மற்றும் மரகதம் என்ற பெண் உள்ளிட்ட ஐந்து பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றனர்
இந்தாண்டு தற்போதுவரை கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 70க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இதில் சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications