கோவை அருகே பகீர்.. ஊருக்குள் புகுந்து தாக்கிய காட்டு யானை.. முதியவர் பலி, 2 இளைஞர்கள் படுகாயம்
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி முதியவர் பலியாகியுள்ள நிலையில், 2 இளைஞர்கள் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள வாஞ்சியம்மன் நகர் பகுதிக்குள் நேற்று (டிச.12ம் தேதி) அதிகாலை ஒற்றை காட்டு யானை புகுந்தது. அப்போது வீட்டின் அருகே இருந்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற முதியவரை காட்டுயானை தாக்கி தூக்கி வீசியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ஆறுச்சாமி மற்றும் முத்து என்ற இரண்டு இளைஞர்களை யானை தூக்கி வீசியது. இதில் கால் முறிவு ஏற்பட்டு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவரையும் அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
பயங்கர வேகத்தில் வந்த லாரி.. அடுத்தடுத்து மோதல்.. சினிமா காட்சி போல பறந்த கார்கள்- தொப்பூர் வீடியோ
தகவல் அறிந்து அங்கு வந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும் அப்பகுதியில் சடலமாக இருந்த ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர். தொடர்ந்து யானைகள் அப்பகுதிக்கு வராமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.