ரணில் விக்ரமசிங்க பிரதமரான 3 நாளில் குவியும் கடன் உதவி... ரூ.15,000 கோடி கொடுக்கும் ஜப்பான்
கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சுமார் 15,000 கோடி ரூபாயை வழங்க ஜப்பான் நாடு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்றுமதி நிதி அளிப்பு நிறுவனமான இந்திய எக்சின் வங்கி இலங்கைக்கு 10,000 கோடி ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
மக்களின் விருப்பப்படி, அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால கூட்டணி ஆட்சிக்கு பொறுப்பேற்க எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார். ஆனால் அதிபர் பதவியிலிருந்து கோத்தபய விலகினால் மட்டுமே ஆட்சிப் பொறுப்பேற்பேன் என பிரேமதாசா திட்டவட்டமாக கூறினார்.

மகிந்தா பதவி விலகிய பிறகு, அதிபர் பதவியிலிருந்து கோத்தபய விலக வேண்டுமென தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இதற்கு சம்மதிக்காத கோத்தபய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை புதிய பிரதமராக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இலங்கையின் 26வது பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கே வியாழக்கிழமையன்று மாலை பொறுப்பேற்றார்.
இந்த நியமனத்தை இலங்கையின் எந்த எதிர்க்கட்சியும் ஏற்கவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியும் ஏற்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக சில எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன. இதனால், ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
தற்போதைய சூழலில், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை அளிப்பதாக புதிய பிரதமர் விக்ரமசிங்க கூறி உள்ளார். இதற்காக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கவும், மருந்துகள் கிடைக்கவும், எரிபொருள் சப்ளை தடையின்றி செய்யவும் தனது கட்சியினரைக் கொண்டு சிறப்பு குழுவை விக்ரமசிங்க அமைத்துள்ளார்.
தனது பொருளாதார மீட்பு நடவடிக்கைகளின் மூலம் எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தி, அனைத்து கட்சிகளின் உதவியுடன் அமைச்சரவை அமைப்பேன் என ரணில் தெரிவித்துள்ளார். டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 360 ரூபாயாக சரிவை கண்டுள்ளது. இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட பூஜ்யம் என்றாகிவிட்ட நிலையில் அதனை அதிகரிக்கும் முயற்சியில் ரணில் விக்ரமசிங்க இறங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் பல நாடுகள் கடன் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜப்பான் மட்டும் சுமார் 15,497 கோடி ரூபாயை கடனாக வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்றுமதி நிதி அளிப்பு நிறுவனமான இந்திய எக்சின் வங்கி இலங்கைக்கு 10,000 கோடி ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதாரம் சார்ந்த பேச்சுவார்த்தைகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபடவுள்ளார்.
தற்போது இலங்கையில் போராட்டக்காரர்களை கண்டதும் சுட ராணுவத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதால் இரண்டு நாட்களாக போராட்டங்கள் குறைந்துள்ளன. எனிலும் ரணிலுக்கு எதிரான மக்களின் கோபம் இதுவரை குறையவில்லை.
ரணில் வந்தா மட்டும் விடுவோமா? கோத்தபய ராஜபக்சேவை நெருக்கும் இலங்கை மக்கள்.. தொடரும் போராட்டம்