இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. மே 17ல் விவாதம்!
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது.
இலங்கையில் மிக கடுமையான பொருளாதார சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவிற்கு எதிராக மக்கள் சாலைகளில் இறங்கி கடுமையாக போராட்டம் செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து அங்கு பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினமா செய்தார். அதோடு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ராஜினாமா செய்யும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இனி ஓட முடியாது! மகிந்த ராஜபக்சே, மாஜி கூட்டாளிகள் 16 பேர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை!

ராஜபக்சே ராஜினாமா
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார். அதிபர் கோத்தபய ராஜபக்சே அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இலங்கை பொதுஜன முன்னணி கூட்டணி இவருக்கு ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது. அவருக்கு 160க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிபர்
நேற்று புதிய பிரதமர் பதவி ஏற்ற நிலையில் இன்னொரு பக்கம் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. மே 17ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு அதிபரை நீக்குவது என்பது சிக்கலான வேலை ஆகும். இது தொடர்பான தீர்மானம் உருவாக்கப்பட்டு, அது சபாநாயகரிடம் அளிக்கப்பட்டு உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
இதை அவர் அதிபரின் ஒப்புதலுக்கு அளிப்பார். அதிபர் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க வேண்டும். பின்னர் அதன் மீது வாக்கெடுப்பு நடக்கும். நாடாளுமன்றத்தில் இந்த வாக்கெடுப்பில் 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அதன்பின் நாடாளுமன்றம் அதிபரை நீக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோர்ட்டுக்கு அனுப்பும். அதில் கோர்ட் முடிவு எடுத்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒப்புதல்
பின்னர் மீண்டும் அதே தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு வரும். அதில் மீண்டும் 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும். இதன் பின்பே அங்கு அதிபர் நீக்கப்பட முடியும். ஆனால் இதற்கான வாய்ப்புகள் குறைவு. அதிபராக பதவி விலகினால்தான் உண்டு. அங்கு ஏற்கனவே தங்களுக்கு எம்பிக்கள் ஆதரவு உள்ளது என்று இலங்கை பொதுஜன மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. 225 மொத்த எம்பிக்களில் 160 எம்பிக்கள் ஆதரவு உள்ளதாக கூறுகிறது. இதனால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படுவது சந்தேகமாகவே உள்ளது.