கோத்தபாய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்- பிரதமர் அலுவலகம், இலங்கை விமானப் படை அறிவிப்பு
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் கோத்தபாய ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பி ஓடிவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோத்தபாய ராஜபக்சேவும் அவரது மனைவியும் இன்று அதிகாலை மாலத்தீவு தப்பிச் செல்ல விமானப் படை விமானம் வழங்கப்பட்டதாகவும் விமானப் படை தெரிவித்துள்ளது.
Recommended Video
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு அரசாங்கம் தீர்வு காணாததால் பொதுமக்கள் தன்னெழுச்சியான கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாக கொழும்பில் முகாமிட்டு போராட்டங்களை கிளர்ச்சியாளர்கள் நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் கடும் நெருக்கடியைத் தொடர்ந்து முதலில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜ்னாமா செய்தார். அவருக்கு பதிலாக இடைக்கால பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். ஆனாலும் ஜனாதிபதி, பிரதமர் இருவருமே பதவி விலக வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் கோரிக்கையாகும்.

ஜூலை 9 கிளர்ச்சி
இப்போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஜூலை 9-ந் தேதி ஜனாதிபதி மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால் உயிருக்கு பயந்து, ஜனாதிபதி மாளிகையைவிட்டு கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடினார். அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் தமது வீட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அதிகாரப்பூர்வ வீடு தீ வைத்தும் எரிக்கப்பட்டது.

ராஜினாமா செய்ய கெடு
ஜூலை 13-ந் தேதிக்குள் ராஜினாமா செய்வதாக கோத்தபாய ராஜபக்சே அறிவித்த போதும் கிளர்ச்சியாளர்களிடையே நம்பிக்கை ஏற்படாமல் இருந்தது. இதனால் இன்று பகல் 1 மணிக்குள் கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்தாக வேண்டும் எனவும் கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதலே கோத்தபாய ராஜபக்சே நாட்டைவிட்டு தப்பி ஓட முயற்சிக்கிறார் என தகவல்கள் வெளியாகின.

அமெரிக்கா, இந்தியா
முதலில் அமெரிக்காவின் கலிபோர்னியா செல்ல விசா கேட்டிருந்தார் கோத்தபாய; ஆனால் அமெரிக்காவோ விசா வழங்க மறுத்துவிட்டது என தகவல்கள் வெளியாகின. பின்னர் குடும்பத்தினர் 15 பேருடன் தென்னிந்தியா செல்ல கோத்தபாய ராஜபக்சே முயற்சித்தார்; ஆனால் இந்திய அரசு அனுமதி தரவில்லை எனவும் கூறப்பட்டது. மேலும் இலங்கை விமான படை தலைமை தளபதி வீட்டில்தான் கோத்தபாய பதுங்கி கிடக்கிறார் எனவும் கூறப்பட்டது. ஆனால் இதனை நேற்று விமானப் படை திட்டவட்டமாக மறுத்திருந்தது.

மாலத்தீவு தப்பி ஓட்டம்
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு கோத்தபாய ராஜபக்சே, மாலத்தீவு நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இதனை இலங்கை பிரதமர் அலுவலகம், விமானப் படை தலைமயகம் இரண்டுமே உறுதி செய்துள்ளன. இது தொடர்பாக இலங்கை விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்தின் கீழ் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு, சுங்க மற்றும் ஏனைய அனைத்து சட்டங்களுக்கு உட்பட்டு ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் இரு மெய்ப்பாதுகாவலர்களுடன் மாலைதீவிற்கு புறப்படுவதற்காக விமானம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications