மதங்களை கடந்து விடியவிடிய தர்ணா... ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம்... போராட்டத்தால் குலுங்கும் இலங்கை
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய வலியுறுத்தி மதங்களை தாண்டி அனைவரும் ஒன்றிணைந்து விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர். இதில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினரும் பாகுபாடு ஏதுமின்றி ஒற்றுமை உணர்வோடு பங்கேற்றனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இந்த பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் தவறான கொள்கையும், நிதி நிலைமையை கவனிக்க தவறியதும் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என நாளுக்கு நாள் இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

மாணவர்கள் போராட்டம்
இலங்கையில் நேற்று நாடாளுமன்ற கூட்டம் நடந்த நிலையில் இதே கோரிக்கை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தி மாணவர்கள் கலைக்கப்பட்டனர். மேலும் ராஜபக்சேவின் செயலகம் அமைந்துள்ள காலி முகத்திடல் பூங்காவில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

10 ஆயிரம் பேருடன் கவன ஈர்ப்பு போராட்டம்
நேற்று மதியம் துவங்கிய இந்த ஆர்ப்பாட்டம் இரவு முழுவதும் நீடித்து கவன ஈர்ப்பு போராட்டமாக மாறியது. இந்த போராட்டத்தின்போது ஏராளமானவர்கள் காலே ரோட்டில் அமர்ந்தனர். இதனால் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 10 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றதால் இலங்கை குலுங்கியது.

செல்போன் சிக்னல்
இதற்கிடையே போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் ரமலான் நோன்பை நேற்று போராட்டத்துக்கு மத்தியில் சாலையில் அமர்ந்து முடித்தனர். இன்று காலை வரை போராட்டம் அங்கு தொடர்ந்தது. போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இன்று காலையில் அங்கு செல்போன் சிக்னல் தடைப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோஷங்கள், பதாகைகள்
மேலும் போராட்டம், கண்டன ஊர்வலகத்தில் பொதுமக்கள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் இலங்கையின் தேசியக்கொடி, ராஜபக்சே அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். மேலும், அதிபர், பிரதமர் அமைச்சர் என இலங்கையின் அதிகாரமிக்க பதவிகளை வகிக்கும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும், "ராஜபக்சேக்களே வீட்டுக்கு செல்லுங்கள்'' என கோஷமிட்டனர். இலங்கையில் சாதி, மதம், மொழி பாகுபாடுகளை கடந்து அனைத்து தரப்பு மக்களும் தற்போது ராஜபக்சே அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர். இதனால் வரும் நாட்களில் இன்னும் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications