ரூ.80ஐ தாண்டியது.. தொடர்ந்து சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு - ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க டாலர்
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த நிலையில் இன்று மேலும் சரிந்துள்ளது. இதனால் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்கா டாலரின் மதிப்பு 80.06 ஆக உயர்ந்திருக்கிறது. சர்வதேச அளவில் டாலரின் தேவை அதிகரித்துள்ளதையடுத்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படியான ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சொல்லப்படுகிறது. இந்த போரால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வு சங்கிலி தொடர்போல எரிபொருள் மட்டுமல்லாது பல்வேறு பொருட்களின் விலையையும் அதிகரிக்க வழிவகுத்திருக்கிறது. இதனால் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க இயலாததாக இருக்கிறது.

பணவீக்கம்
விலையேற்றம் பணவீக்கத்தின் அடிப்படை அலகு. எனவே பணவீக்கம் அதிகரிக்கிறது. இது பங்கு சந்தையிலும் எதிரொலிக்கத் தொடங்குகிறது. இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் பங்கு சந்தைகளும் தொடர் சரிவை சந்தித்து வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை டாலர்களில் மாற்றி வருகின்றனர். இதனால் மற்ற நாடுகளின் பண மதிப்பும் சரிவை கண்டுள்ளது. இப்படியான சரிவுக்கு ரஷ்யா-உக்ரைன் போர் காரணம் என்று சொன்னாலும் அதற்கு முன்னரே இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வர்த்தகப் பற்றாக்குறை
இந்தியாவை பொறுத்த அளவில் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2,563 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அதிகபட்ச உயர்வாகும். வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசம் ஆகும். இந்தியாவின் ஜுன் மாத ஏற்றுமதி 16.8 சதவீதம் அதிகரித்து 3,790 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது. நடப்பாண்டில் இந்திய ரூபாய் அதன் மதிப்பில் 7 சதவிகிதத்திற்கும் அதிகமாக இழந்துள்ளது.

வெளியேற்றம்
இதனை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணியில் 6ல் ஒரு பகுதியை விற்க தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஒருவேளை நிலைமை கட்டுக்குள் வராவிடில் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த சரிவானது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் இவ்வாறு இருந்தாலும் கடந்த மாதம் வெளியேறிய அளவில் இந்த மாதம் அந்நிய முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று யெஸ் செக்யூரிட்டிஸின் நிறுவன ஆராய்ச்சியின் மூத்த துணைத் தலைவர் ஹிதேஷ் ஜெயின் கூறியுள்ளார்.

சரிவு
மேலும் இந்திய சந்தைகள் கடந்த 20 நாட்களில் ஓரளவு லாபத்தை பார்த்துள்ளன என்றும் கூறியுள்ளார். இன்று நடைபெறும் ஐரோப்பிய மத்திய வங்கியின் பணவியல் கொள்கை கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவுகளை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதேபோல இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications