டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Exclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி:ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் மூலம் டெல்லியில் ஆட்சியை பிடித்த கெஜ்ரிவாலை, உலக மகா நடிகர் என விமர்சிக்கிறார் அல்கா லம்பா. இவர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கடந்த வாரம் அவர் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியின் விவரம் பின்வருமாறு;

alka lamba exclusive interview about her political life graph

கேள்வி: ஆம் ஆத்மியில் இருந்து விலகி காங்கிரசில் மீண்டும் இணைந்துள்ளீர்கள்... இப்போது எப்படி உணர்கிறீர்கள்?

பதில்: எனது தாய்வீட்டிற்கு வந்ததை போல் உணர்கிறேன். நான் ஏற்கனவே 20 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்திருக்கிறேன். காந்திய கொள்கைகளை எப்போதும் பின்தொடர்பவள் நான். இடையே ஆம் ஆத்மி கட்சிக்கு சென்றாலும் எனது கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளவில்லை. இப்போது மீண்டும் தாய் கட்சியான காங்கிரஸில் இணைந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்த நடிகர் என அப்போது எனக்குத் தெரியாது, ஆம் ஆத்மியில் இணைந்த பிறகு தான் அவரின் சுயரூபம் தெரியவந்தது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது லோக்பால் வேண்டும், அது வேண்டும் இது வேண்டும் என போராடியது எல்லாம் நாடகம் என இப்போது தான் புரிந்தது. தற்போது மத்தியில் உள்ள பாஜக அரசை எதிர்த்து பேச அஞ்சி நடுங்குகிறார் கெஜ்ரிவால்.

கேள்வி: கெஜ்ரிவால் முழுமையாக பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார் எனக் கூறுகிறீர்களா?

பதில்: ஆமாம், அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக ஊழல் எதிர்ப்பு நாடகம் நடத்தியவர் கெஜ்ரிவால். அவர் நினைத்தது மாதிரியே டெல்லி முதலமைச்சராகிவிட்டார், இப்போது கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டார். கெஜ்ரிவால் ஒரு விளம்பர பிரியர், மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிடுவார். ஆனால் எதையும் செயல்படுத்தமாட்டார். அவரை பொருத்தவரை விளம்பரம் தேடிக்கொள்வது மட்டுமே குறிக்கோள். பாஜகவுடன் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டு, பாவம் கட்சியில் இருப்பவர்களை முட்டாள்கள் ஆக்குகிறார். அதற்கு உதாரணம் கூற வேண்டும் என்றால், காஷ்மீர் சிறந்து அந்தஸ்து ரத்து விவகாரத்தில் மத்திய அரசை கெஜ்ரிவால் பாராட்டியதை கூறலாம்.

கேள்வி: கெஜ்ரிவாலுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?

பதில்: இது தனிப்பட்ட பிரச்சனையில்லை, கெஜ்ரிவால் கட்சியில் சர்வாதிகாரியாக செயல்படுவதை பார்த்து மனம் வெறுத்து போய் பலர் ஆம் ஆத்மியில் வெளியேறியதை உங்களுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். சசிபூஷன், பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ், பேராசிரியர் அனந்தகுமார், உள்ளிட்டோர் எல்லாம் ஆம் ஆத்மி தொடங்குவதற்கு கெஜ்ரிவாலோடு தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள். ஆனால் அவர்கள் யாரும் இன்று ஆம் ஆத்மியில் இல்லை. ஜனநாயகம் இல்லாத இடத்தில் இருந்து என்ன பயன், பகை உணர்வோடு செயல்படுபவர் கெஜ்ரிவால்.

கேள்வி: காங்கிரஸ் கட்சியை ஊழல் கட்சி என நீங்கள் ஒரு காலத்தில் விமர்சித்தீர்கள், பிறகு அந்தக் கட்சியிலேயே மீண்டும் இணைந்தது ஏன்?

பதில்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான் அந்தக் கட்சியில் இருபது ஆண்டுகாலம் இருந்திருக்கிறேன். ஷீலா தீட்சித்தை பற்றி கெஜ்ரிவால் சொன்ன கட்டுக்கதைகளையும், பொய்யையும் நம்பி தவறு செய்துவிட்டேன். ராம்லீலா மைதானத்தில் ஊழல் எதிர்ப்பு நாடகம் நடத்திய கெஜ்ரிவால், காங்கிரஸ் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை அப்போது தெரியாமல் நம்பிவிட்டேன். ஆனால், இப்போது தான் தெரிகிறது காங்கிரஸை பற்றி கெஜ்ரிவால் கூறியதெல்லாம் நூறு சதவீதம் பொய் என்று, உறுதியாக சொல்கிறேன் கெஜ்ரிவால் ஒரு உலக மகா நடிகர், ஏமாற்றுக்காரர். தன்னை அரசியலில் முன்னிறுத்திக்கொள்ள அபாண்ட குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மீது சுமத்தியுள்ளார்.

கேள்வி: வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டெல்லி முதலமைச்சர் வேட்பாளராக உங்களை முன்னிறுத்தக்கூறி டிமாண்ட் வைத்ததாக கூறப்படுகிறதே?

பதில்: (சிரிக்கிறார்) இல்லை..இல்லை, இதை நான் மறுக்கிறேன். நான் காங்கிரஸ் தலைமையிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. சாதாரண அடிப்படை உறுப்பினராக இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளேன். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை சோனியாகாந்தியை சந்தித்து பேசியிருக்கிறேன், அப்போது கூட இது தொடர்பாக எதுவும் பேசவில்லை. கட்சி வளர்ச்சி மற்றும் கட்டமைப்பை பலப்படுத்துதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக மட்டுமே சோனியா அறிவுறுத்தினார்.

கேள்வி : டெல்லி சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக போட்டியிட உங்களுக்கு தகுதியில்லை என நினைக்கிறீர்களா?

பதில்: அப்படி கருதவில்லை, அது குறித்து பேச இப்போது உரிய நேரமில்லை, தேர்தல் வரட்டும் பார்க்கலாம். எதைப்பற்றியும் சிந்தித்து கொண்டிருக்காமல் சோனியாகாந்தி அறிவுறுத்தல் படி கட்சி வளர்ச்சிப்பணிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்.

English summary
aam aadmi party ex mla alka lamba talk about arvind kejriwal activities and reason for her joining congress
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X