வழக்கம்போல் வராத பிரதமர் மோடி.. அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் காங்கிரஸ் விமர்சனம்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றாத நிலையில் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர் கூட்டத்தொடர் நாளை துவங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளது. மேலும் மத்திய அரசு சார்பில் 24 மசோதாக்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை துவங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நாளை கூட உள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டம்
இந்நிலையில் கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனக்கூறி இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, ஜெய்ராம் ரமேஷ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், சுப்ரியா சூலே, திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுக சார்பில் தம்பிதுரை உள்பட அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர்.

காங்கிரஸ் விமர்சனம்
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. இந்நிலையில் தான் இதனை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் துவங்கி உள்ளது. வழக்கம்போல் பிரதமர் கலந்துகொள்ளவில்லை. இது அன்பார்லிமென்ட்ரி இல்லையா?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

அனல்பறக்க வாய்ப்பு
தற்போதைய சூழலில் நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்ப தயாராக உள்ளன. குறிப்பாக பணவீக்கம், நாட்டில் வேலைவாய்ப்பு இன்மை உள்பட பாஜக அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யலாம். இதனால் நாளை முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டம் நடத்த தடை
முன்னதாக நாடாளுமன்ற செயலகம் சார்பில் ஊழல், சர்வாதிகாரம், பலாத்காரம் உள்பட பல்வேறு வார்த்தைகளை எம்பிக்கள் விவாதத்தில் பயன்படுத்த கூடாது என கூறப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தான் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரங்களையும் முன்வைத்தும் எதிர்க்கட்சிகள் பேச திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தான் அனைத்து கட்சிக்கூட்டம் இன்று நடந்து முடிந்துள்ளது.












Click it and Unblock the Notifications