மத்திய அரசை வீழ்த்த வெளிநாட்டு நிதி.. காங்கிரஸை கை காட்டும் பாஜக! உச்சம் பெறும் USAID பஞ்சாயத்து
டெல்லி: இந்தியாவில் தேர்தல் ஜனநாயகம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அமெரிக்கா வழங்கி வந்த நிதி தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிதியை என்டிஏ தலைமையிலான மத்திய அரசை வீழ்த்த காங்கிரஸ் பயன்படுத்தியதாக, பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
பாகஜவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள காங்கிரஸ், USAID தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் USAID எனப்படும் நிதிதான். தன்னுடைய நட்பு நாடுகளுக்காக, அதன் வளர்ச்சிக்காக அமெரிக்க அரசு நிதி வழங்கும் திட்டத்தை கடந்த 1961ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அப்போதைய அதிபர் ஜான் எஃப் கென்னடிதான் இதனை கொண்டு வந்தார். 60களில் இந்தியா சுதந்திரம் பெற்ற இளம் நாடாக இருந்தது. எனவே, வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்கள் தேர்தலில் பங்கெடுப்பதை அதிகரிக்கவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டது.
இந்தியாவுக்கு மட்டும் கிடையாது, பல வளரும் நாடுகளுக்கு கல்வி, மருத்துவம், தொழில் வளர்ச்சி என பல நோக்கங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
சரி இது ஏன் இப்போது சர்ச்சையை உருவாக்குகிறது என்று கேட்கிறீர்களா? சர்ச்சைக்கு காரணம் டிரம்ப்தான். அமெரிக்காவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "அதிக வரி விதிக்கும் இந்தியாவுக்கு எதுக்கு USAID நிதியை கொடுக்கனும்? இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதற்காகவே பைடன் அரசு 2.1 கோடி அமெரிக்க டாலரை USAID நிதி என்கிற பெயரில் அந்நாட்டுக்கு வழங்க ஒப்புதல் அளித்திருந்தார்" என்று பேசியிருந்தார். இவரது பேச்சை மேற்கோள்காட்டி காங்கிரஸ் மீது பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
அதாவது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றியை தடுக்க வெளிநாட்டு சக்திகள் முயற்சிகளை மேற்கொள்கின்றன என மோடி கூறியிருந்தார். அந்த நேரத்தில்தான் ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சுற்று பயணத்தின்போது வெளிநாட்டு சக்திகளை உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார் என்று பாஜக குற்றம்சாட்டுகிறது.
அதானி விவகாரம் நினைவிருக்கிறதா? இந்த பிரச்சனையை கிளப்பியதில், 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டம்' (OCCRP) எனும் வௌிநாட்டு அமைப்பின் பங்கு அதிகம். இந்த அமைப்புக்கு USAID மூலமாக நிதி வருகிறது. இதனை மேற்கோள் காட்டிதான் பாஜக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
ஆனால் காங்கிரஸ் இதற்கு கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் வேறு யாரையோ ஆட்சியில் அமர்த்ததான் பைடன் USAID நிதியை அறிவித்தார் என்கிற டிரம்ப்பின் கூற்றையே நிராகரித்துள்ளது.
மட்டுமல்லாது கடந்த 2014 தொடங்கி இன்று வரை அமெரிக்கா எவ்வளவு கொடுத்தது? அதில் அரசு எவ்வளவு செலவு செய்தது உள்ளிட்ட விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
கூடுதல் தகவல்கள் என்னவெனில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது யுபிஏ அரசு, அமெரிக்காவிடமிருந்து 20.4 கோடி டாலர்களை பெற்றிருக்கிறது. ஆனால் அரசு சாரா நிறுவனங்கள் 212 கோடி டாலர்களை பெற்றிருந்திருக்கின்றன.
இதுவே பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு தரப்பில் நிதியை பெறுவது குறைந்திருக்கிறது. அதாவது என்டிஏ அரசு 10 லட்சம் டாலர்களை மட்டுமே பெற்றிருக்கிறது. மறுபுறம் அரசு சாரா நிறுவனங்கள் 258 கோடி டாலர்களை பெற்றிருந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications